போலீசாரிடமிருந்து தப்ப முயன்ற பைக் திருடன் கால் உடைந்தது
திருச்சி, ஜுன் 14 மணப்பாறையில் போலீசாரை தள்ளிவிட்டு தப்பிச்செல்ல முயன்ற இருசக்கர வாகன திருடனின் கால் உடைந்தது. திருச்சி மாவட்டம், மணப்பாறையில் சேதுரத்தினபுரம், பொத்தமேட்டுப்பட்டி, பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருசக்கர வாகன திருட்டு அதிகரித்து வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பொத்தமேட்டுப்பட்டியில் இருசக்கர வாகனத்தை திருடமுயன்றபோது மணல்மேல்குடியைச் சேர்ந்த மாதவன் (26), தாராபுரத்தைச் சேர்ந்த ஆகாஷ் (22) ஆகிய இருவரையும் பொதுமக்கள் பிடித்து மணப்பாறை போலீசாரிடம் ஒப்படைத்தனர். மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆகாஷ் போலீசாருக்கு போக்கு காட்டி விட்டு கழிப்பறை ஜன்னல் வழியாக தப்பிச்சென்று குமரபட்டியில் இருந்து ஒரு இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு சென்றார். இந்நிலையில் மற்றொரு குற்றவாளியான மாதவன் வைத்து மூன்று இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார் ஆகாஷ் மற்றும் மாதவனுக்கும் உதவியாக இருந்த குளித்தவையைச் சேர்ந்த வினோத் (29) என்பவரையும் கைது செய்தனர. ஆகாஷை தொடர்ந்து தேடி வந்த நிலையில் ஆதவன் கல்லூரி அருகே கைது செய்து தாராபுரத்திற்கு அழைத்துச் சென்று அவர் தப்பி சென்ற போது எடுத்துச் சென்ற பிளாட்டினா வாகனத்தை மீட்டு மணப்பாறைக்கு அழைத்து வரும்பொழுது கலிங்கப்பட்டி பாலம் அருகே திருடிய வாகனம் இருப்பதாக கூறியதால் வாகனத்தை விட்டு இறங்கியபோது காவலர்கள் ராமு மற்றும் தாசையாவே கீழே தள்ளிவிட்டு பாலத்தில் இருந்து குதித்து தப்பமுயன்றபோது ஆகாசின் வலது கால் உடைந்தது. தள்ளிவிட்டதில் காயமடைந்த ராமு, தாசையா மற்றும் ஆகாஷ் ஆகிய மூவரும் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மணப்பாறை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். போலீசாரை தள்ளிவிட்டு தப்பிச்செல்ல முயன்ற திருடன் கால் உடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.