தேவேந்திரகுலர் வேளாளர் பெயர் பலகை மீது சாணி பூசி அவமரியாதை
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மும்முடி சோழமங்கலத்தில் உள்ள தேவேந்திர குல வேளாளர் பெயர் பலகை மீது சாணியை அடித்து வன்மத்தை தீர்த்துக் கொண்ட சமூக விரோதிகள்.தொடர்ந்து 4 வது முறையாக இது போன்ற செயலில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுத்து சாதி மோதல்கள் உருவாகாமல் காவல்துறையும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கூறுகின்றனர்.
லால்குடி அருகே மும்முடி சோழமங்கலத்தில் 500க்கும் மேற்பட்ட தேவேந்திர குல வேளாளர் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த வீதியின் முகப்பில் தங்களது அடையாளமாக தேவேந்திரகுல வேளாளர் மும்முடி சோழமங்கலம் என பெயர் பலகை வைத்துள்ளனர். இந்த பெயர் பலகையில் இன்று அதிகாலையில் சமூக விரோதிகள் சிலர் சாணியை அடித்து வன்மத்தை தீர்த்துக் கொண்டுள்ளனர். கடந்த 2022 ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தொடர்ந்து நான்காவது முறையாக இதுபோன்று சாணி அடிப்பதும் பெயர் பலகை மீது வர்ணத்தை பூசி மறைப்பதும் உள்ளிட்ட வேலைகளை செய்து வருகின்றனர் என அப்பகுதி இளைஞர்கள் கூறுகின்றனர். ஆனால் இதுவரை இந்த செயலில் ஈடுபட்ட சமூக விரோதிகள் மீது கைது மற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் தியாகி இமானுவேல் சேகரனின் ஒவ்வொரு குருபூஜைக்ககு வர்ணம் பூசி கொடியேற்றம் நடந்த நிகழ்வுக்கு மறுநாள் இந்த செயலில் சமூக விரோதிகள் ஈடுபட்டு வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தேவேந்திர குல வேளாளர் பெயர் பலகை மீது சாணி அடித்த சமூக விரோதிகளை கண்டுபிடித்து நடவடிக்கைகள் எடுக்கவும், அமைதிப் பேச்சு வார்த்தை மூலம் ஒரு தீர்வு ஏற்படாவிட்டால் லால்குடி பகுதியில் சாதி கலவரம் உருவாகும் வாய்ப்பு உள்ளது. சாதி கலவரம் உருவாகாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இதனைத் தொடர்ந்து அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாதவாறு லால்குடி டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.