குட்கா விற்ற பாமக நிர்வாகி, மூதாட்டிக்கு நூதன தண்டனை; காவல் நிலையத்தை சுத்தம் செய்து பறவைகளுக்கு உணவு அளித்தனர்
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள சுருளி கோவிலில் சேர்ந்தவர் ரவிக்குமார்(42). இவர் பாமக ஒன்றிய செயலாளராக உள்ளார். இந்த நிலையில் இவர் தனது டீக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பதுக்கி விற்ற போது திருவெறும்பூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நாகராஜ் கைது செய்தார்.
அதேபோல் காட்டூரை சேர்ந்த காளியம்மாள்(60) மூதாட்டி தனது பெட்டி கடையில் குட்கா பதுக்கி விற்பனை செய்த போது அவரையும் நாகராஜ் கைது செய்தார். பின்னர் அவர்கள் இருவரையும் திருச்சி 6வது குற்றவியல் நீதிமன்ற (பொறுப்பு) நீதிபதி குமார் முன் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்களுக்கு நீதிபதி குமார் நிபந்தனை ஜாமின் வழங்கியதோடு நூதன தண்டனையும் வழங்கினார். 20 நாட்கள் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும். மேலும் திருவெறும்பூர் காவல் நிலையத்தை 20 நாள் சுத்தம் செய்வதோடு அங்கு பறவைகளுக்கு உணவு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் ரவிக்குமார் மற்றும் காளியம்மாள் திருவெறும்பூர் காவல் நிலையத்தை சுத்தம் செய்து பறவைகளுக்கு உணவு வழங்கினர்.