பொதுமக்களால் இடிக்கப்பட்ட கோவில் சுற்றுச்சுவர் மீண்டும் அதிகாரிகளால் கட்டப்பட்டது
திருச்சி கிராப்பட்டியில் மலை முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான சுற்றுச்சுவரை சிலர் இடித்து பொதுப்பாதையாக மாற்றினர். மேலும் கோவில் வளாகத்தில் குப்பைகள் கொட்டும் இடமாகவும் மாற்றப்பட்டது.
இந்த நிலையில் கோவில் நிர்வாகம் தரப்பில், சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டது தொடர்பாக கோர்ட்டில் ஆணை பெறப்பட்டது. கோர்ட்டு உத்தரவின்பேரில், இடிக்கப்பட்ட மலைமுருகன் கோவிலுக்கு சொந்தமான சுற்றுச்சுவர் நிர்வாகத்தினரால் கட்டும் பணி தொடங்கியது. அப்போது அப்பகுதி தெருவில் வசிக்கும் பொதுமக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து திருச்சி மேற்கு தாசில்தார் ரமேஷ், எடமலைப்பட்டிபுதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காவேரி, வருவாய் ஆய்வாளர் குமாரவவேல் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி விக்னேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து வந்தனர். அதைத்தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்த மக்களிடம் கோர்ட்டு உத்தரவை காண்பித்து, அதிகாரிகள் முன்னிலையில் சுற்றுச்சுவர் கட்டிமுடிக்கப்பட்டது. சுமார் 8 அடி உயரத்திற்கு இந்த சுற்று சுவர் கட்டப்பட்டது.