தந்தை திட்டியதால் மகள் தற்கொலை
திருச்சி, பிப்.5 திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா சொக்கநாதபுரம் நடுத்தெரு பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களது மகள் ஹரிப்பிரியா (20) துறையூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவரது தந்தை பெரியசாமி தனது மகளிடம் செல்போனில் பேசுவது வழக்கம். கடந்த மாதம் 21-ம்தேதி பெரியசாமி தனது மகளுக்கு போன் செய்துள்ளார். மகள் போனை எடுக்கவில்லை. இதனால் தனது மகளை கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மன உளைச்சல் ஏற்பட்ட ஹரிப்பிரியா பூச்சி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்று மயங்கி கிடந்துள்ளார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு இருங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் பரிதாபமாக ஹரிப்பிரியா இறந்து போனார். சம்பவம் குறித்து ஜெம்புநாதபுரம் போலீசார் ஹரிப்பிரியா உடலை கைப்பற்றி துறையூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.