முசிறி அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடர்பாக அமைதி பேச்சு வார்த்தை
முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் முசிறி தாசில்தாரிடம் புகார் மனு அளித்தனர். இந்த கோரிக்கை புகார் மனுவின் பேரில் முசிறி தாசில்தார் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தாசில்தார் சந்திரதேவநாதன் தலைமை தாங்கினார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜீவ்காந்தி, வருவாய் துறை அலுவலர்கள் மூர்த்தி, சரவணன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.
அப்போது முசிறி அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கையில் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு இட ஒதுக்கீடு வழங்கப்படாமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் மாணவர் சேர்க்கையில் மொத்தம் 726 இடங்களில் 718 இடங்கள் அரசு கூறியுள்ள விதிமுறைகளை பின்பற்றி அதற்காக தனி கமிட்டி அமைக்கப்பட்டு நிரப்பப்பட்டு உள்ளதாகவும், கல்லூரியில் இனபாகுபாடுகள்
ஏதும் இல்லை எனவும், மாணவிகள் விடுதியில் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி முறையாக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் ஏற்க்கபடும் என கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பேச்சுவார்த்தையில் இரு தரப்பினர் இடையே சுமூக உடன்பாடு ஏற்பட்டது. பேச்சுவார்த்தையில் அரசு கல்லூரி முதல்வர் ராஜ்குமார், கல்லூரி கமிட்டி உறுப்பினர்கள், கம்யூனிஸ்ட் கட்சியினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.