திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்தல் சம்பவம் எதிரொலியாக சுங்கத் துறை கண்காணிப்பாளர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி விமான நிலையத்துக்கு துபாய்,மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் தங்கம் கடத்தி வரும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது.

மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தி தங்கம் கடத்தி வரும் கும்பலை பிடித்து வருகின்றனர். இந்த கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக கூறி கடந்த சில நாட்களுக்கு முன்பு சுங்கத் துறை ஆய்வாளர் ஏற்கனவே கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையில் கடந்த மாதம் சுமார் 8 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.இந்த சம்பவம் தொடர்பாக சுங்கத்துறை அதிகாரி ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில் சுங்கத் துறையில் துணை ஆணையராக பணிபுரிந்து வந்த சரவணக்குமார் சுங்கத்துறை அலுவலகத்தின் வேறு பிரிவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக தேவேந்திர வர்மா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்தல் அதிகரித்து வரும் நிலையில் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.