கிணற்றில் விழுந்த புள்ளிமான் உயிருடன் மீட்பு
உப்பிலியபுரத்தை அடுத்துள்ள எரகுடியைச் சேர்ந்த ராஜேந்திரன்(42) என்பவரது தோட்டத்தில் நேற்று மாலை 2 வயதுடைய பெண் புள்ளிமான் ஒன்று தவறி அங்குள்ள விவசாய கிணற்றில் விழுந்தது. 60 அடி ஆழமுள்ள கிணற்றில் 15 அடி அளவு தண்ணீர் இருந்ததால் மான் உயிருக்கு போராடிய நிலையில் நீந்திக் கொண்டிருந்தது.

இதுகுறித்து உப்பிலியபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவலளித்ததின் பேரில், நிலைய அலுவலர் மனோகரன் தலைமையில் 7 பேர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
பின்னர் கயிறு மூலம் கிணற்றுக்குள் இறங்கி புள்ளிமானை உயிருடன் மீட்டனர். மீட்கப்பட்ட புள்ளிமான் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, முதலுதவி மற்றும் சிகிச்சைக்குப் பின் பச்சைமலை வனப்பகுதியில் விடப்பட்டது.