காமன்வெல்த் பவர்லிஃப்டிங் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு
திருச்சி, அக். 16 தென்னாப்ரிக்கா நாட்டில் கடந்த 8 ம் தேதி முதல் 14 தேதி வரை காமன்வெல்த் பவர்லிஃப்டிங் சாம்பியன்ஷிப் ஜூனியர் பிரிவு போட்டியில் பங்கேற்க திருச்சி மாவட்டம், மணப்பாறையைச் சேர்ந்த ராஜேஸ்வரி விநாயகமூர்த்தி பாலமுருகன், திருச்சியில் சேர்ந்த ஷேக் அப்துல்லா ஆகிய மூன்று விளையாட்டு வீரர்கள் தேர்வாகி இருந்தனர். அவர்கள் கடந்த மாதம் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
தென்னாப்பிரிக்கா, சன்சிட்டியில் நடந்த காமன்வெல்த் போட்டியில் 20 ற்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்ற நிலையில் 120 ப்ளஸ் எடைப்பிரிவில் பங்கேற்ற பாலமுருகன் 770 கிலோ எடையை தூக்கி தங்கப்பதக்கத்தை வென்றார். இப்போட்டியில் இவர் மொத்தம் நான்கு தங்கம் வென்றார். இதேபோல் பெண்களுக்கான போட்டியில் பங்கேற்ற ராஜேஸ்வரி 69 எடை கிலோ பிரிவில் 440 கிலோ எடையை தூக்கி தங்கப்பதக்கம் பெற்றார். இவர் மொத்தம் 3 தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளார்.
இந்நிலையில் பதக்கங்களுடன் சொந்த ஊரான மணப்பாறைக்கு வந்த ராஜேஸ்வரி மற்றும் பாலமுருகன் ஆகிய இருவருக்கும் பேருந்து நிலையம் அருகே சால்வை மற்றும் மாலை அணிவித்து பட்டாசு வெடித்தும் மேள தாளங்கள் முழங்க ஆட்டம், பாட்டத்துடன் கோலாகலமாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் பேருந்து நிலையம் அருகில் இருந்து இருவரும் திறந்த ஜீப்பில் நகரின் பல்வேறு பகுதிகளின் வழியாக காமராஜர் சிலை வரை ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். வழிநெடுகிலும் பொதுமக்கள் தங்க பதக்கம் வென்ற விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் தாங்கள் பயிற்சி பெற்ற தனியார் விளையாட்டு பயிற்சி மையத்தில் கேக் வெட்டி மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.