ஒரே வாரத்தில் 7 வீடுகள், 2 கடைகள், 100 பவுன், கோடிகளில் திருட்டு – இதுல… திருச்சியின் நல்ல காவல் நிலையமாம்! – பொதுமக்கள் பீதி!
“திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது” என்பார்கள். கிட்டத்திட்ட கடந்த ஒரே வாரத்தில் திருச்சியில் அப்பகுதி மக்கள் ஒட்டு மொத்த பேரும் உறைந்த பீதியில் உள்ளனர். சுபகாரியங்களுக்கு கூட வெளியே செல்லாமல் வீட்டை பாதுகாக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இரவு நேரத்தில் பெண்களும் குழந்தைகளும் மிகுந்த அச்சத்தில் இருப்பதாக கணவன்மார்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். எந்த நேரத்தில் யார் வருவார்களோ என தெரியாமல் தவிக்கும் திருவெறும்பூர் தொடரும் திருட்டு சம்பவத்தையும், அப்பகுதி மக்களின் கோரிக்கையின் விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.

திருவெறும்பூர் பகுதியைப் பொறுத்தவரை திருச்சியின் ஒரு முக்கிய பகுதி. பாரத மிகு மின் நிறுவனம், நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி, துப்பாக்கி தொழிற்சாலை, Happ என தொழிற்சாலைகளும் கல்விக்கூடங்களும் நிறைந்த பகுதியாக இருப்பதால் எப்போதும் பிசியாக காணப்படும் ஒரு பகுதி. இதன்காரணமாகவே அப்பகுதியில் வெளி மாநிலங்களிலிருந்தும், வெளி மாவட்டத்தில் இருந்தும் பலர் தங்கி வருகின்றனர்.

இந்தநிலையில் திருவெறும்பூர் பகுதிக்கு உட்பட்ட, குறிப்பாக திருச்சியின் நல்ல காவல் நிலையம் என பெயர் பெற்ற திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அம்மன் நகர், ராஜ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரே வாரத்தில் 7 வீடுகளில் அடுத்தடுத்து திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது. இதில் 2 கடைகளும், குறிப்பாக பி.எச்.இ.எல் வளாகத்தில் இருந்த சூப்பர் மார்க்கெட்டில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு திருடு போய் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அப்பகுதியில் உள்ள கொள்ளை போன 7 வீடுகளில் செல்லையன், வரதசாரி ஆகிய இருவரும் பி.எச்.இ.எல் எம்பிளாய்கள் வீடுகளில் மட்டும் சுமார் 100 பவுன் நகைகளும், தன் மகள் கல்யாணத்திற்காக சேர்த்துவைத்த அத்தனையும் பறிகொடுத்துள்ளனர். இது மட்டுமல்லாமல் அதே பகுதியை சேர்ந்த சரவணன் என்பவரது வீட்டில் இருந்த எல்.இ.டி டிவி, நகைகள், எலக்ட்ரானிக் பொருட்கள் எதையும் வைக்காமல் சுருட்டி சென்றனர் மர்மநபர்கள்.

இப்படி அடுக்கடுக்காக திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில் அப்பகுதி மக்கள் சிலர் கூறுகையில்….”எங்கள் பகுதிக்கு இரவு நேரத்தில் போலீசார் ரோந்து வந்தும் பயனில்லை. நாங்கள் நீண்ட காலமாகவே எங்கள் பகுதிக்கு பாதுகாப்பு வேண்டும் என காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. தினந்தோறும் நாங்கள் அச்சத்தில் தான் இருந்து வருகிறோம். வேலைக்கு சென்றால் கூட வீட்டில் என்ன நடக்குமோ, ஏது நடக்குமோ என்ற யோசனை மட்டும்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. சுபகாரியங்கள் மற்ற நிகழ்வுகளுக்கு கூட நிம்மதியாக சென்று வர முடியவில்லை.
![]()
திருவெறும்பூர் காவல் நிலையத்திற்கு நல்ல காவல் நிலையம் என அவார்டு கொடுத்திருப்பது ஜோக்காக இருக்கிறது. இங்கு அவ்வளவு பிரச்சனைகள் நடந்து வரும் நிலையில் காவல்துறையினர் தரப்பில் தகுந்த நடவடிக்கைகள் எடுக்காதது வருத்தம் அளிக்கிறது.
இந்த வாரம் மட்டும் 7 வீடுகளில் திருடு போயுள்ளது. காவல்துறை தரப்பில் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்துவதாக தெரிவிக்கின்றனர். இதுவரை நான்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

எங்கள் பகுதியில் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். எங்களின் பாதுகாப்பிற்கும், நிம்மதியாக வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர் அப்பகுதி வாசிகள்.

இதுமட்டுமில்லாமல் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சந்தித்தும் அப்பகுதி மக்கள் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. காவல் நிலையத்தில் திருட்டு போயுள்ளதாக புகார் அளிக்கச் சென்றால் திருடு போய் உள்ளதை மாற்றி குறைவாக எழுதுவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. தினந்தோறும் என்ன நடக்குமோ என அச்சத்தில் வாழ்வை நகர்த்தும் மக்களுக்கு விடிவு காலம் பிறக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!
திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய…https://chat.whatsapp.com/ElwJ6Sxx3w58HlHTxk97fo
