தொழிலாளர் நல அமைப்புகள் உள்ளடக்கிய செயலாக்கக்குழு கூட்டம்
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேசிய அமைப்புசாரா தொழிலாளர்கள் ஈ-ஷ்ரம் (e-shram) வலைதளத்தில் பதிவு செய்தல் தொடர்பாக அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பல்வேறு தொழிலாளர் நல அமைப்புகள் உள்ளடக்கிய செயலாக்கக்குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் சிவராசு தலைமையில் நடந்தது. தேசிய அமைப்புசாரா தொழிலாளர்கள் முகாமினை தொடங்கி வைத்து, வலைதளத்தில் பதிவு செய்த 20 பார்வையற்ற தொழிலாளர்களுக்கு தேசிய அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான அடையாள அட்டையை கலெக்டர் வழங்கினார்.
ஈ-ஷ்ரம் என்னும் வலைதளத்தில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான கட்டுமான தொழிலாளர்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், வீட்டுபணியாளர்கள், பால் வியாபாரிகள், விவசாய தொழிலாளர்கள், சுயதொழில் செய்பவர்கள், நடைபாதை வியாபாரிகள், சிறுவியாபாரிகள், மதிய உணவு திட்ட பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மீன்பிடி தொழிலாளர்கள், நூறுநாள் வேலை செய்பவர்கள், செங்கல்சூளை தொழிலாளர்கள் உள்ளிட்டோர் இந்த வலைதளத்தில் தங்களின் ஆதார்எண், கைப்பேசி எண், வங்கி கணக்கு ஆகியவற்றை கொண்டு அருகில் உள்ள பொதுசேவை மையத்தில் ஈ-ஷ்ரம் (e-shram) வலைதளத்தில் இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம். இந்த நிகழ்வில் தொழிலாளர் இணை ஆணையர் தர்மசீலன், உதவி ஆணையர் தங்கராசு, பொதுசேவை மையம் மாவட்ட மேலாளர்கள் புவனேஷ்வரன், மணிமாறன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.