இணைப்பிற்கு எதிர்ப்பு : கிராம மக்கள் முற்றுகை போராட்டம்
திருச்சி, ஜன.21 திருச்சி மாவட்டம், லால்குடி அருகே நகராட்சி மற்றும் மாநகராட்சியுடன் ஊராட்சியை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டாவது கட்டமாக கிராம மக்கள் அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்
தமிழகத்தில் உள்ள பல்வேறு கிராம ஊராட்சிகளை மாநகராட்சி மற்றும் நகராட்சியுடன் இணைத்து தரம் உயர்த்த வேண்டும் என தமிழக அரசு முடிவு செய்து அதற்கான ஆணையை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் நெருஞ்சலங்குடி ஊராட்சியை லால்குடி நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் தொடர்ச்சியாக இருண்டாவது கட்டமாக நெருஞ்சலங்குடி கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த லால்குடி வட்டாட்சியர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கோரிக்கை பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது என கூறி சமரச பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இதேபோன்று லால்குடி வட்டம், வாளாடி ஊராட்சியை திருச்சி மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு பொதுமக்கள் சாலை மறியல் செய்த நிலையில்
இன்று 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்து திருச்சி – லால்குடி சாலையில் வாளாடி பேருந்து நிறுத்தம் அருகே அமர்ந்து இரண்டாவது கட்டமாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.