மாணவ, மாணவிகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டம்
திருச்சி, பிப்.11 மணப்பாறை அருகே போக்சோ சட்டத்தில் கைதான தலைமை ஆசிரியரை விடுவிக்க கோரி 5 வது நாளான மாணவ – மாணவிகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டம்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பழைய பாளையத்தில் அரசு ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி தனித்தனியே உள்ளது. தொடக்கப் பள்ளியில் 68 மாணவ- மாணவிகள் படித்துவரும் நிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் நாகராஜன் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக மணப்பாறை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இந்நிலையில் நாகராஜன் மக்களிடம் நன்மதிப்பை பெற்றவர் என்பதால் அவர் மீது காழ்புணர்ச்சியின் காரணமாகவே கைது செய்யப்பட்டுள்ளார் அவரை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளியில் உள்ள மாணவ- மாணவிகளின் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த வியாழக்கிழமையில் இருந்து இன்று வரை மாணவ- மாணவிகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர். தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளியில் சேர்த்து 164 மாணவ – மாணவிகள் படித்து வரும் சூழ்நிலையில் இரண்டு மாணவிகள் மட்டுமே இன்று பள்ளிக்கு வந்துள்ளனர். இந்த சம்பவத்தில் உரிய தீர்வு கண்டு மாணவ- மாணவிகளின் கல்வி பாதிக்காத வண்ணம் பள்ளிக்கு வருவதற்கான நடவடிக்கையை அரசு தீவிரப்படுத்திட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 5 வது நாளாக அரசு பள்ளிக்கு மாணவ- மாணவிகளை அனுப்பாமல் போராட்டம் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.