பஸ்சில் சென்ற பெண்ணிடம் 7½ பவுன் நகை அபேஸ்
திருச்சி மாவட்டம் சோமரசம் பேட்டை வீரமாதோப்பு பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின். இவருடைய மனைவி ஜான்சிராணி(34). திருச்சியில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் கணக்காளராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவர் பணி முடிந்து வீட்டுக்கு புறப்பட்டார். திருச்சி அரசு ஆஸ்பத்திரி அருகே உள்ள பஸ்நிறுத்தத்தில் இருந்து பஸ் ஏறி வீட்டுக்கு சென்றார்.
அப்போது தனது கைப்பையில் 7½ பவுன் நகையை அவர் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. வீட்டுக்கு சென்று பார்த்த போது கைப்பையை காணவில்லை. அவர் பஸ்சில் வந்த போது யாரோ மர்ம ஆசாமிகள் நகை இருந்த கைப்பையை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரி போலீசில் அவர் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.