திருச்சியில் ரெயில்வே சுரங்கப்பாதைகளில் எச்சரிக்கை பலகை பொருத்தப்பட்டுள்ளது
புதுக்கோட்டை மாவட்டம் துடையூரில் உள்ள ரெயில்வே சுரங்கப்பாதையில் கடந்த 17-ந் தேதி இரவு மழைநீர் தேங்கி இருந்தது. அப்போது அந்த பகுதியில் தனது மாமியாருடன் காரில் சென்ற கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த பெண் டாக்டர் சத்யா சுரங்கப்பாதையை கடக்க முயன்றார். அவர்களுடைய கார் மழைநீரில் சிக்கி கொண்டது. காருக்குள் இருந்து அவரது மாமியார் வெளியேறி தப்பி சென்றார்.
ஆனால் டாக்டர் சத்யாவோ காரில் இருந்து வெளியேற முடியாமல் மூச்சுதிணறி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரெயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கினால் வாகன ஓட்டிகள் கடந்து சென்றுவிடலாம் என்ற அசட்டு தைரியத்துடன் செல்லும்போது, எதிர்பாரத விதமாக நீரில் சிக்கி கொள்வதால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.
திருச்சி மேலப்புதூர் சுரங்கப்பாதையிலும் கூட மழைக்காலங்களில் தேங்கி கிடக்கும் தண்ணீரில் கடந்து செல்லும்போது, அவ்வப்போது வாகனங்கள் சிக்கி கொண்டு பழுதடைந்து நின்றுவிடும் சம்பவமும் கடந்த காலங்களில் நடைபெற்று உள்ளது. இந்தநிலையில் ரெயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கினால் வாகன ஓட்டிகள் கடந்து செல்ல வேண்டாம் என ரெயில்வே சார்பில் திருச்சியில் பல்வேறு பகுதிகளில் உள்ள சுரங்கப்பாதைகள் முன்பு எச்சரிக்கை பலகை பொருத்தப்பட்டு வருகிறது. திருச்சி கிராப்பட்டி அன்புநகர் ரெயில்வே சுரங்கப்பாதையின் இருபுறமும் இதுபோன்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.