மறைமுக ஏலத்தில் விற்பனை செய்து விவசாயிகள் அதிக லாபம் பெறலாம்; கலெக்டர் சிவராசு தகவல்
திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருச்சி மாவட்டத்தில் மண்ணச்சநல்லூர், லால்குடி, துறையூர், மணப்பாறை, துவரங்குறிச்சி, காட்டுப்புத்தூர், தாத்தையங்கார்பேட்டை ஆகிய ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் உள்ளன. இங்கு அறிக்கையிடப்பட்ட வேளாண் விளை பொருட்களான நெல், உளுந்து, நிலக்கடலை, எள், பருத்தி, மஞ்சள், கரும்புவெல்லம், முந்திரி, தேங்காய், மிளகாய், மல்லி, மரவள்ளி இதர விவசாய விளைபொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்வதற்கு நல்ல விலைபெற கிட்டங்கிகள் வசதி மற்றும் உலர்கள வசதிகள் உள்ளது.
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வேளாண் விளைபொருட்களை விற்பனை செய்வதால் விவசாயிகளுக்கு மறைமுக ஏலம் மூலம் பொருட்களின் தரத்துக்கு ஏற்ப அதிகபட்சவிலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. விற்பனை செய்யப்படும் விளைபொருட்களுக்கு தரகு மற்றும் கமிஷன் பிடித்தம் ஏதுமின்றி முழுமையாக தொகை நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. சரியான எடை, உடனடி பணப்பட்டுவாடா, குளிர்பதன வங்கி, பொருளீட்டு கடன் வசதி, உழவர்நல நிதிதிட்டம் ஆகிய வசதிகள் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் உள்ளது.
ஒரு விவசாயி அதிகபட்சமாக 180 நாட்களுக்கு தங்களது விளைபொருளை கிட்டங்கியில்சேமிக்க இயலும். இதில் முதல் 15 நாட்களுக்கு எவ்வித வாடகையும் வசூல் செய்யப்படுவதில்லை. மீதமுள்ள நாட்களுக்கு ஒருநாளைக்கு ஒரு குவிண்டாலுக்கு 5 பைசாவீதம் மட்டுமே வாடகை வசூல் செய்யப்படுகிறது. மேலும், விளைபொருளை கிட்டங்கியில் இருப்புவைக்கும் நிலையில் விவசாயிகளின் அவசர பணத் தேவைகளுக்கு அதிகபட்சமாக ஒரு விவசாயிக்கு ரூ.3 லட்சம் வீதம் பொருளீட்டுக்கடன் வழங்கப்படுகிறது.
மிகவும் குறைந்த வட்டியாக 5 சதவீத வட்டி வீதத்தில் கடன் வழங்கப்படுகிறது. பொருளீட்டுக்கடன் இருப்பு வைத்த முதல் 15 நாட்களுக்கு வட்டியில்லா சலுகை வழங்கப்படுகிறது. மேலும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 25 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதன கிடங்கு உள்ளது. அரசு விதிகளின்படி வாடகை அல்லது குத்தகை அடிப்படையில் பயன்படுத்தி கொள்ளலாம். ஆதலால் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த வேளாண் விளை பொருட்களை ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொண்டு மறைமுக ஏலத்தில் விற்பனை செய்து அதிகபட்ச விலை பெறலாம்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.