திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு நடைமுறைக்கு வந்த மனு பெட்டிகள்
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று கடந்த இரண்டு வருடங்களாக நீடித்து வரும் நிலையில் தமிழக அரசு சார்பில் பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் திங்கள்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுவது வழக்கம். இதில் மாவட்ட ஆட்சியர் கலந்துகொண்டு மக்களின் குறைகளை கேட்டறிந்து நடவடிக்கைகளை எடுப்பார்கள்.
இந்த நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் நடைபெறும் குறை தீர்க்கும் முகாம் கொரோனா நோய் தொற்று காரணமாக ஆன்லைன் முறையில் வாட்ஸ்அப் எண் மூலம் அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் பொதுமக்கள் தங்களுடைய மனுக்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நுழைவாயிலில் உள்ள மனு பெட்டியில் போட்டு செல்கின்றனர். இனிவரும் நாட்களில் நோய்த்தொற்று முற்றிலுமாக குறைந்து பிறகு நேரடியாக குறைதீர்க்கும் முகாம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
