திருவிழா நடத்துவதில் இருதரப்பினரிடையே பிரச்சனை : கோவிலை பூட்டிய அதிகாரிகள்

0 189
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 30  மணப்பாறை அருகே நள்ளிரவில் கோவிலை பூட்டி சாவியை எடுத்துச் சென்ற அதிகாரிகள். கோவில் திருவிழா நடத்துவதில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்சினையால் அதிகாரிகள் நடவடிக்கை.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த பன்னாங்கொம்பில் மாரியம்மன், பகவதி அம்மன் கோவில்கள் உள்ளது. இந்தக் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் திருவிழா நடைபெறும் நிலையில் இருதரப்பினருக்கிடையே எழுந்த பிரச்சினையில் கடந்த சில ஆண்டுகளாக திருவிழா நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு திருவிழா நடத்திட வேண்டும் என்று ஒரு தரப்பைச் சேர்ந்த பெரும்பான்மையான மக்கள் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் இருதரப்பினருக்கும் இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டதால் திருவிழா நடத்துவதில் சிக்கல் நீடித்து வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் புத்தாநத்தம் காவல் துறையினர் திருவிழா நடத்த அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஒரு தரப்பைச் சேர்ந்த பெருபான்மையான மக்கள் மாரியம்மன் கோவில் திருவிழாவை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

நேற்று மாலை சுத்த தீர்வை நடத்தி அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்து காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த நிலையில் மற்றொரு தரப்பை சேர்ந்தவர்கள் திருவிழா நடத்திட எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை அடுத்து ஸ்ரீரங்கம் ஆர்டிஓ சீனிவாசன், மணப்பாறை வட்டாட்சியர் செல்வம், டிஎஸ்பி காவியா ஆகியோர் பேச்சுவார்த்தையில் நடத்தினார். மாலை துவங்கிய பேச்சுவார்த்தை சுமார் 6 மணி நேரமாக பல கட்டங்களாக நடந்த போதும் இருதரப்பினர் இடையே ஒருமித்த கருத்து ஏற்பட வில்லை. இதனால் திருவிழாவை நிறுத்துவதாக கூறிய வருவாய்த்துறையினர் இரவு 12 மணியளவில் கோவிலை பூட்டச்சொல்லி சாவியை வாங்கிச் சென்றனர். இன்று (30 ம்தேதி) இருதரப்பினரிடமும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்கும் வரை யாரும் திருவிழா ஏற்பாடுகளை செய்யக்கூடாது எனவும் தெரிவித்தனர். 6 மணிநேர பேச்சுவார்த்தை முடிவுக்கு வராததால் அதிகாரிகள் கோவிலை பூட்டி சாவியை வாங்கிச்சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.