மணப்பாறை அருகே கிராவல் மண் கடத்திய வாகனங்களை மறித்த பொதுமக்கள்
திருச்சி, ஆக.14 மணப்பாறை அருகே குளத்தில் இருந்து கிராவல் மண் கடத்தல்.
வாகனங்களை மறித்த பொதுமக்களால் பரபரப்பு.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே கே.பெரியபட்டி ஊராட்சியில் உள்ள இனாம்இடையபட்டியில் கீழபாப்பான்குளம் உள்ளது. சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் உள்ள இக்குளத்தின் மூலம் 100 ஏக்கர் வேளாண்நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்நிலையில் குளத்தில் இருந்து கிராவல் மண்ணைஅதே பகுதியைச் சேர்ந்த சிலர் ஜேசிபி இயந்திரம் மூலம் வெட்டி எடுத்து டிராக்டர் டிப்பரில் கடத்தி வந்துள்ளனர். இதுகுறித்து மணப்பாறை வருவாய்த்துறையினரிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று பகல் நேரத்திலேயே மண் வெட்டப்படுவதாக தகவலறிந்த இடையபட்டி, புதூர், இனாம்இடையபட்டியைச் சேர்ந்த பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது ஜேசிபி மூலம் மண்ணை வெட்டி எடுத்து டிராக்டர் டிப்பரில் ஏற்றுக்கொண்ட இருந்துள்ளனர்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மக்கள் குளத்தில் இருந்து மண்ணை வெட்டக்கூடாது என வாகனங்களை மறித்து தடுத்துள்ளனர். ஆனால் மணல் கொள்ளையர்கள் இரண்டு வாகனங்களையும் வேகமாக பொதுமக்களை மோதுவது போல் ஓட்டிச் சென்றுவிட்டனர். இதுகுறித்து பொதுமக்கள் மண் கடத்தல் குறித்து மணப்பாறை வருவாய் துறை மற்றும் காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து மண் கடத்தலை தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.