விவசாயிகளுக்கு ஈக்களை கட்டுப்படுத்த வேளாண் கல்லூரி மாணவிகள் விளக்கம்
விவசாயிகளுக்கு ஈக்களை கட்டுப்படுத்த “ஃபிஷ்மீல் ட்ராப்” குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் விளக்கம்
திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டார பகுதியில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்தி கிராமிய பல்கலைகழகத்தின் வேளாண்மை மற்றும் கால்நடை அறிவியல் கல்லூரியின் இறுதி ஆண்டு மாணவிகள் நா. வர்ஷா, பா. அபிநயா, பா. பிரீத்தி, ரா. யாழினி, சக்தி. வ. அனுஷியா ஆகியோர் விவசாயிகளுக்கு ஈக்கள் தாக்குதலை கட்டுப்படுத்தும் உயிரியல் முறைகளில் ஒன்றான “ஃபிஷ்மீல் ட்ராப்” (Fishmeal Trap) குறித்து நடைமுறை விளக்கக் காட்சியை ஏற்பாடு செய்தனர்.
நிகழ்ச்சியில், மாணவிகள் ஃபிஷ்மீல் ட்ராப் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது, வயலில் எங்கு எவ்வாறு அமைக்க வேண்டும், அது மூலம் ஈக்களை எவ்வாறு ஈர்த்து பிடிக்க முடியும் என்பதைக் காட்டினர். குறிப்பாக, பழம் மற்றும் காய்கறி பயிர்களில் ஈக்கள் ஏற்படுத்தும் சேதங்களை குறைப்பதில் இம்முறை மிகச் சிறந்த பயனளிப்பதை விவசாயிகளுக்கு விளக்கினர்.
மேலும், இந்த வலைகளைப் பயன்படுத்துவதன் மூலம் பூச்சிமருந்து செலவினத்தை குறைத்து, சுற்றுச்சூழல் நட்பு முறையில் பயிர் பாதுகாப்பை உறுதி செய்யலாம் என்பதையும் எடுத்துரைத்தனர்.