மணப்பாறை அருகே வனப்பகுதியில் சிறியரக ராக்கெட் குண்டுகள் கண்டுபிடிப்பு
திருச்சி, டிச.29 மணப்பாறை அருகே வனப்பகுதியில் ராணுவத்தினரின் பயிற்சியின்போது தவறிய இரண்டு சிறியரக ராக்கெட் குண்டுகளை பொதுமக்கள் கண்டுபிடித்தனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே வீரப்பூரில் உள்ள வீரமலையில் இந்திய ராணுவத்தினர் குண்டு சுடும் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். வீரமலையின் ஒருபுறம் பயிற்சி நடைபெறும் நிலையில் அதன் பின்புறப் பகுதியான கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள நாகனூர் வனப்பகுதிக்குட்பட்ட வீரமலையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் கால்நடைகளை மேச்சலுக்கு ஓட்டிச் சென்ற பொதுமக்கள் சிறிய ரக ராக்கெட் லான்சர் குண்டுகள் கிடப்பதைப்பார்த்து தோகைமலை காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். அதில் ஒரு குண்டு பாறைக்கு அடியிலும், மற்றொன்று மரத்தடியில் மண்ணில் புதைந்த நிலையிலும் வெவ்வேறு இடங்களில் கிடந்துள்ளது. இரண்டு குண்டுகளும் மண்ணில் புதைந்திருந்த நிலையில் மழையால் மண் அரிப்பு ஏற்பட்டதால் குண்டுகள் தற்போது வெளியே தெரிந்துள்ளது. இவைகள் பல ஆண்டுகளுக்கு முன் பயிற்சியின்போது பயன்படுத்தப்பட்ட பழைய குண்டுகள் எனவும் கண்டுபிடிக்கப்பட்ட குண்டுகள் ராணுவத்தினரின் பயிற்சியின்போது தவறி மலையைத் தாண்டி வந்து விழுந்துள்ளதும் இரண்டும் வெடிக்காத குண்டுகள் எனவும் தெரிய வந்துள்ளது.
சம்பவ இடத்தில் மணப்பாறை வட்டாட்சியர் சுந்தர பாண்டியன், வனத்துறையினர், மணப்பாறை மற்றும் தோகைமலை காவல்துறையினர், வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். சம்பவ இடம் வையம்பட்டி காவல் எல்லைக்குட்பட்ட பகுதி என்பதால் வனத்துறையினர் இதுகுறித்து வையம்பட்டி போலீசில் புகார் செய்தனர். இதனை அடுத்து திருச்சியிலிருந்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு குண்டுகள் சம்பவ இடத்திலிருந்து மீட்டு அதனை செயலிழப்பு செய்யப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.