மணப்பாறை அருகே வீரப்பூர் பெரியகாண்டியம்மன் கோயிலில் படுகளம் : நள்ளிரவில் மெய்சிலிர்க்க வைத்த தத்ரூப நிகழ்வு

0 249
Stalin trichy visit

திருச்சி,பிப். 24 மணப்பாறை அருகே புகழ்பெற்ற குளக்கரை கருப்பசாமி கோவிலில் படுகளம் சாய்தல் பின் எழுப்புதல் நிகழ்ச்சி நள்ளிரவில் மெய்சிலிர்க்க வைத்த தத்ரூப நிகழ்வு.  வரலாற்று நிகழ்வைக் காண திரண்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்.

வீரவரலாற்றைக் கொண்ட அண்ணன்மார் தெய்வங்கள் என்று அழைக்கப்படும் பொன்னர் – சங்கர் கோவில்கள் திருச்சி மாவட்டம், மணப்பாறையை சுற்றியுள்ள வளநாடு, படுகளம், வீரப்பூர் ஆகிய பகுதிகளில் உள்ளது. இக்கோவில்களில் முதன்மையானதாக கருதப்படும்
வீரப்பூரில் கன்னிமாரம்மன், பொன்னர் – சங்கர், தங்காள், பெரியகாண்டியம்மன், மகாமுனி உள்ளிட்ட பல்வேறு தெய்வங்களுக்கு கோவில்கள் உள்ளன.

புகழ்பெற்ற இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் மாசிப் பெருந்திருவிழா வெகுவிமர்ச்சையாக நடைபெறும். வீரப்பூரில் நடைபெறும் திருவிழாவை ஒட்டியே வளநாடு மற்றும் படுகளம் கோவில்களிலும் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதே போல் இந்த ஆண்டும் பிப்ரவரி 17 ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான அண்ணன்மார் போரின் போது மாண்டு பின் மீண்ட வரலாற்று சிறப்பு வாய்ந்த படுகளம் சாய்தல் பின் எழுப்புதல் நிகழ்ச்சி நேற்று இரவு தொடங்கி இன்று அதிகாலை வரை படுகளம் கோவிலில் நடைபெற்றது. இந்த நிகழ்வைக்காண பல்லாயிரக்கணக்கான மக்கள் குவிந்திருந்தனர்.

நள்ளிரவில் விழாவிற்கு வந்த பலரும் திடீர் திடீரென மயங்கி விழவே உடனே அங்கு கோவில் தொண்டாற்றும் ஊழியர்கள் மயங்கியவர்களை தூக்கி வந்து ஆலயம் முன்பு வரிசையாக படுக்க வைத்து மஞ்சள் துணியை போர்த்தி வைத்தனர். இதையடுத்து அதிகாலை அம்மன் பூ பல்லக்கில் பவனி வந்தார். அதன் பின்னர் கூட்டத்தில் இருந்த பருவமடையாத சிறுமி அருள்வந்து ஆடவே அந்த சிறுமியை அழைத்து வந்து தீர்த்த குடத்தை எடுத்து அசைவற்று கிடந்தவர்களை சுற்றி மூன்று முறை வலம் வந்த பின்னர் அந்த சிறுமி தீர்த்தம் தெளித்த பின் உடனே படுத்திருந்தவர்கள் அப்படியே துள்ளிக் குதித்து எழுந்து சகஜ நிலைக்கு திரும்பினர்.

இதையடுத்து ஆலய தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடு செய்து அருள்வந்து ஆடிய சிறுமிக்கு சிறப்பு செய்து அனுப்பி வைத்தனர். இதையடுத்து அம்மனுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. நள்ளிரவில் மயங்கிய பக்தர்கள் அதிகாலை வரை சில மணி நேரம் அசைவற்ற நிலையில் கிடந்தது காண்போரை மெய்சிலிக்க வைத்தது.

இப்படியாக இரவில் தொடங்கி அதிகாலை வரை நீடித்த இந்த நிகழ்வு காண்போரை நெகிழ்ச்சி அடைய செய்யும் வகையில் அமைத்திருந்ததுடன் மெய்சிலிக்க வைக்கும் நிகழ்வாகவும் இருந்தது. இந்த திருவிழாவில் கொங்கு மண்டலம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் முதன்மையான நிகழ்வாக பொன்னர் குதிரை வாகனத்திலும், சங்கர் யானை வாகனத்திலும் செல்லும் வேடபரி நிகழ்ச்சி இன்று மாலை வீரப்பூரில் நடைபெறுகின்றது. இந்த திருவிழாவில் 700 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.