லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் – சூதாடிய 15 பேர் கைது
திருச்சி, மே 11 திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் சட்டவிரோதச் செயல்களைத் தடுக்கக் காவல்துறையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் முசிறி அருகே காட்டுப்புத்தூர் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றதாக முருகையன் (வயது52) என்பவரைக் காட்டுப்புத்தூர் காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து லாட்டரி எண்கள் எழுதப்பட்ட தாள்கள் மற்றும் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல், மணப்பாறை அருகே லாட்டரி விற்ற அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (வயது57) என்பவரை மணப்பாறை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து 2,660 லாட்டரி சீட்டுகள் மற்றும் ₹2,060 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதே போன்று லால்குடி அருகே ஏரவல்லி தோப்புப் பகுதியில் சட்டவிரோதமாகச் சூதாட்டம் நடப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் பிரதீபா தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில்,அங்கு சீட்டு விளையாடிக் கொண்டிருந்த ஸ்ரீநிவாசன், தீபன், மகேஷ் பாபு,தாஸ்,ராஜா,சரவணன் மற்றும் அருணாசலம் உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 கட்டு சீட்டுகள் மற்றும் ₹4,580 பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் ,அதே பகுதியில் மற்றொரு குழுவாகச் சூதாட்டத்தில் ஈடுபட்ட பிரசன்னா, அலெக்ஸ், உபையதுல்லா, ராஜா, செந்தில்குமார், செல்வராஜ், சங்கர் மற்றும் மாரியப்பன் உள்ளிட்ட 8 பேரை போலீசார் பிடித்தனர். அவர்களிடமிருந்து 15 கட்டு சீட்டுகள் மற்றும் ₹28,810 ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட 17 பேர் மீதும் அந்தந்த காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.மேலும்,பொது இடங்களில் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.