மணப்பாறையில் வாக்காளர்களுக்கு அமைச்சர் ரமேஷ் நன்றி தெரிவித்தார்
திருச்சி, ஜூன் 1 திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மணப்பாறை ஒன்றியத்தில் கே.பெரியபட்டி மற்றும் ஆண்டவர்கோவில் பகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கலந்து கொண்டு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், திருச்சி மாவட்டத்திலேயே ஸ்ரீரங்கம் தொகுதியில் எனக்கு அதிக வாக்கு வித்யாசத்தில் வெற்றி பெறச் செய்துள்ளீர்கள். எல்லாம் எங்கள் தலைவருக்கு கிடைத்த வெற்றி தான். அவருக்காக தான் அனைவரும் வாக்களித்தீர்கள். அதனால் தான் தற்போது நான் அமைச்சராக பொறுப்பேற்று உள்ளேன். நாங்கள் எம்.எல்.ஏ ஆக இருந்தாலும், அமைச்சராக இருந்தாலும் உங்களிடம் எப்போதும் போல் உங்கள் குடும்பத்தில் ஒருவன் தான். உங்களுக்காக பணி செய்ய தான் வந்திருக்கின்றோம். முதல் முறையாக எம்.எல்.ஏ ஆகி இருக்கின்றோம். எங்கள் குடும்பத்தில் யாரும் அரசியலில் இல்லை. இருந்தாலும் இந்த சாமானியனை வெற்றி பெறச் செய்திருக்கிறீர்கள். மக்கள் அளிக்கும் அனைத்து மனுக்களுக்கும் கண்டிப்பாக தீர்வு காணப்படும். ஆனால் இப்போது தான் நாங்கள் அரசியலை கற்றுக் கொண்டிருக்கின்றோம். அதற்கு கொஞ்சம் நேரம் கொடுங்கள். இன்னொன்றும் கற்றுக் கொண்டிருக்கின்றோம் மக்களை ஏமாற்றாமல், ஊழல் செய்யாமல் நன்றாக மக்களுக்கு செய்யவும் கற்றுக் கொண்டிருக்கின்றோம். இன்னும் 5 வருடத்தில் நீங்கள் எங்களுக்கு வாக்களித்தற்கு பெருமைபடும் அளவில் தொகுதியை மாற்றிக் காட்டுவோம் என்று கூறினார்.