ஸ்ரீரங்கம் பகுதியில் துரை வைகோ எம்.பி. ஆய்வு

0 25
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 11  திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, ஸ்ரீரங்கம், மேலூர், சிந்தாமணி, திருவெறும்பூர் ஆகிய பகுதிகளில் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ பேசியதாவது:

“திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஸ்ரீரங்கம் பகுதியில் இன்று ஆய்வு மேற்கொண்டேன். அப்போது, மேலூர் பகுதி மக்கள் நியாய விலைக்கடை மற்றும் பொதுக் கழிவறை அமைத்துத் தர வேண்டும் எனத் தங்களது கோரிக்கைகளை முன்வைத்தார்கள்.அதற்கேற்ற இடங்கள் தேர்வு செய்யப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளன. விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளன.

ஸ்ரீரங்கம் கோவில் கிழக்கு கோபுரம் சீரமைக்கும் பணி நீண்ட ஆண்டுகளாக நடைபெற்று வருவதால், இவ்வழியாகச் செல்லும் பள்ளி மாணவ, மாணவிகள் 2 கிலோமீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. ஆகையால், இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எஸ். ரமேஷ் அவர்களிடமும், அதிகாரிகளிடமும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீரமைப்புப் பணியை விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்”.

“இந்திய அளவில் பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எஸ். ரமேஷ்  மேற்கொள்வார்.குறிப்பாக, கடந்த சில நாட்களாக அமைச்சர் ரமேஷ்  ஸ்ரீரங்கம் மட்டுமல்லாமல், தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்து வருகிறார். பல நற்பணிகளை அவர் மேற்கொண்டுள்ளார். மேலும், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மிகவும் துடிப்பாகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். ஸ்ரீரங்கத்திற்கு என்றே ஒரு தனி அமைச்சர் கிடைத்திருக்கிறார். ஆகையால், கடந்த காலங்களைவிட ஸ்ரீரங்கம் தொகுதிக்கு வருங்காலம் பொன்னான காலமாக அமையும்”

டெல்லியில் இன்று நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில், தமிழ்நாடு முதல்வர் விஜய் கலந்துகொண்டுள்ளார். இது ஒரு ஆரோக்கியமான விஷயமாகும். குறிப்பாக, ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்குத் தேவையான நிதிகளை முறையாக ஒதுக்குமா? என்பது கேள்விக்குறிதான். ஆனால், கடந்த காலங்களைவிட வரும் காலங்களில் தமிழ்நாட்டிற்குத் தேவையான திட்டங்களுக்கு நிதிகளை ஒதுக்கினால் நன்றாக இருக்கும்.

அதேபோன்று, மத்திய அரசின் சில திட்டங்கள் வரவேற்கத்தக்கவை; அவற்றை முறையாக அமல்படுத்த வேண்டும். திட்டங்கள் வெறும் அறிவிப்புகளாக மட்டுமே இல்லாமல், செயல்பாட்டிற்கு வந்தால் நன்றாக இருக்கும்.

திமுக தனித்துப் போட்டியிடுவது அல்லது கூட்டணியுடன் போட்டியிடுவது என முடிவு எடுக்க வேண்டியது திமுக தலைமை ஆகும். அதேபோன்று, கூட்டணியில் நீடிப்பதா அல்லது விலகுவதா என்பதை முடிவு செய்ய வேண்டியது அந்தந்தக் கட்சிகளின் தலைமை ஆகும். அதன் அடிப்படையில்தான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதேபோன்று, மதிமுகவின் பொதுக்குழுவில் பல்வேறு விஷயங்களைப் பற்றி ஆலோசிக்கப்பட உள்ளது. அதன் பின்புதான், மதிமுகவின் நிலைப்பாட்டைத் தெரிவிக்க முடியும்.

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தனது முதல் உரையின்போது வெளிப்படையாகத் தெரிவித்திருந்தார். தமிழ்நாட்டிற்கு 10 லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ளது; ஆகையால், நிதி நிலைமையைச் சீர் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் என்று கூறியிருந்தார். அதேபோல், ‘நான் கொடுத்த வாக்குறுதிகள் நிதி நிலைமைக்கு ஏற்பச் செயல்படுத்தப்படும்’ எனவும் வெளிப்படையாகத் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில், தமிழ்நாட்டிற்குச் சிறப்பான பட்ஜெட் வரும் என எதிர்பார்க்கிறோம்”

சிங்கப்பெண் திட்டம் ஒரு சிறப்பான திட்டமாகும். பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், இத்திட்டத்தைத் தமிழ்நாடு முதல்வர் விஜய் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார். மேலும், தொழில்நுட்ப வசதிகள் பொருந்திய நவீன கருவிகள் காவல்துறையினருக்கு வழங்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாகச் சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய நகரங்களில் சிங்கப்பெண் திட்டம் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் அடுத்தகட்டமாக இத்திட்டம் செயல்படுத்தப்படும் என நம்புகிறேன்.இந்த ஆண்டு காலநிலை மாற்றத்தால் பருவமழை குறைவாகப் பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், தமிழ்நாட்டு விவசாயிகளுக்குத் தேவையான உரிய நடவடிக்கைகளை மாநில அரசு எடுக்க வேண்டும்” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.