திருவெறும்பூர் பகுதிகளைச் சேர்ந்த காட்டூர், ஆலத்தூர், மலைக்கோயில், திருவெறும்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை 61 முதல் 65 வது வார்டுகளாக திருச்சி மாநகராட்சி தனது எல்லையை விரிவாக்கம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து இப்பகுதிகளில் கடந்த 2 வருடங்களாக தனியார் காண்ட்ராக்ட் நிறுவனம் மூலம் திருச்சி மாநகராட்சி பாதாள வடிகால் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான பணிகளை மேற்கொண்டது. இதனால் கைலாஷ்நகர், சக்திநகர், கோகுலநகர், பாலாஜிநகர், பிரகாஷ்நகர், வைத்தியலிங்கம் நகர், விண் நகர், முத்துநகர், நியுடவுன், முருகன் கோயில் தெரு உள்ளிட்ட அதனைச் சுற்றியுள்ள குடியிருப்புகள் சூழ்ந்த நகர்களின் சாலைகள் குண்டும் குழியுமாக மாறி சேறும் சகதியுமாக மாறியது.

இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டதுடன் தினசரி விபத்துகளிலும் சிக்கி தவித்து வந்தனர். இதுகுறித்து இப்பகுதிகளின் மக்கள் தொகுதி எம்எல்வும், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் சாலைகளைச் சீரமைத்திட கோரிக்கை வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து அவர் நேற்று கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் அனைத்து சேதமடைந்த சாலைகளையும் ஆய்வு செய்து மக்களிடையே கேட்டறிந்தார். தொடர்ந்து அவருடன் இருந்த மாநகராட்சி அதிகாரிகள் கமலக்கண்ணன், லோகநாதன், தயாநிதி, பாலசுப்ரமணியன், ஜோசப், மதிவாணனிடம், பள்ளிகள் 1 ந் தேதி திறக்க உள்ள நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில் உடனடியாக சாலைகளைச் சீரமைத்திட நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
அடாத கொட்டும் மழையிலும் விடாமல் சேதமடைந்த சாலைகளை ஆய்வு செய்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை அப்பகுதி மக்கள் பாராட்டி நன்றி கூறினர்.