கோட்டாத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 20 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றிணைந்த முன்னாள் மாணவர்கள்

0 23
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 30 திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கோட்டாத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், 2001-2006 ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவ, மாணவிகளின் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்றிணைந்த சுமார் 60-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள், தங்களுக்குப் பாடம் பயிற்றுவித்த ஆசிரியர்களை நேரில் சந்தித்து, காலில் விழுந்து வணங்கி, நினைவுப் பரிசுகளை வழங்கித் தங்களது நன்றியையும் அன்பையும் வெளிப்படுத்தினர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்தித்த நண்பர்கள், தங்களின் பள்ளிப்பருவ மலரும் நினைவுகளைப் பகிர்ந்து மகிழ்ந்தனர்.

இந்த நிகழ்வில், ‘ழகரம் கல்வி மற்றும் பொது சேவை இயக்கம்’ என்ற புதிய அமைப்பை முன்னாள் மாணவர்கள் தொடங்கி வைத்தனர். இதன் தொடக்கமாக, 2025-26 கல்வியாண்டில் இப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த மூன்று மாணவர்களுக்குத் தலா ரூ.6,000 ஊக்கத்தொகையை வழங்கினர்.

மேலும், பள்ளியில் பயிலும் ஒற்றைப் பெற்றோர் கொண்ட 18 மாணவர்களுக்குப் பள்ளிப் பைகள், ஜியோமெட்ரி பாக்ஸ்கள் மற்றும் சீருடைகளை வழங்கித் தங்களது சமூக அக்கறையை வெளிப்படுத்தினர்.  முன்னாள் மாணவர்கள் முருகானந்தம், செல்லதுரை, ரேவதி, வினோத் மற்றும் விஜயலட்சுமி, ரம்யா ஆகியோர் இந்த நெகிழ்ச்சியான நிகழ்விற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.