கார் விபத்தில் குழந்தை உயிரிழப்பு
திருச்சி, ஜூலை 18 திருச்சி, பொன்மலைப்பட்டி, அடைக்கல மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் ரூபன் சகாயராஜ். இவரது ஒன்றரை வயது மகன் டிஜோ ஜாய், இன்று காலை தனது பாட்டியுடன் வீட்டின் எதிரே உள்ள அடைக்கல மாதா சர்ச்சுக்குச் சென்று கொண்டிருந்தான். அப்போது, எதிர்பாராதவிதமாக பாட்டியின் கையை உதறிவிட்டு திடீரென சாலையில் ஓடியுள்ளான்.
அப்போது சர்ச்சின் எதிரே காரை நிறுத்துவதற்காக வந்த பொன்மலைப்பட்டியைச் சேர்ந்த காணிக்கை ராஜ் என்பவரின் TN 45 CH 5673 எண் கொண்ட காரின் முன்பகுதியில் குழந்தை பலமாக அடிபட்டான். இதில் படுகாயமடைந்த குழந்தை உடனடியாக மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கே.எம்.சி (KMC) தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டான்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தான்.
இது குறித்து திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காரை ஓட்டி வந்த காணிக்கை ராஜ், இறந்த குழந்தையின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது
பாட்டியின் கையை உதறிவிட்டு ஓடிய குழந்தை, சொந்த உறவினரின் காரிலேயே அடிபட்டு உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.