விவசாயிகளுக்கு இயற்கை மற்றும் அங்கக வேளாண்மை பயிற்சி

0 31
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே மேட்டுப்பட்டி கிராமத்தில், தமிழ்நாடு அரசு வேளாண்மைத்துறையின் வேளாண்மை விரிவாக்கத் துணை இயக்கம் (SMAE), வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (ATMA) மற்றும் மாநில திட்டங்களுக்கான உறுதுணை மறுசீரமைப்புத் திட்டம் (SSEPERS) சார்பில், உள் மாவட்ட உழவர் பயிற்சி “அங்கக மற்றும் இயற்கை வேளாண்மை என்ற தலைப்பில் நடைபெற்றது.
இப்பயிற்சி நிகழ்ச்சியில் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தின் வேளாண்மை மற்றும் கால்நடை அறிவியல் பள்ளியைச் சேர்ந்த கிராமப்புற வேளாண் பணி அனுபவத் திட்ட (RAWE) மாணவிகள் அருந்ததி, ஹஸ்வத்தா, மௌனிகா, ஹர்ஷிணி, ஹரிணி மற்றும் கவிதாஞ்சலி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் போது மாணவிகள் விவசாயிகளுடன் கலந்துரையாடி, இயற்கை முறையில் பயிர் சாகுபடி செய்வதன் முக்கியத்துவம் மற்றும் பண்ணையில் கிடைக்கும் இயற்கை வளங்களைப் பயன்படுத்தி குறைந்த செலவில் தயாரிக்கக்கூடிய இடுபொருட்கள் குறித்து விளக்கினர்.
குறிப்பாக, EM கரைசல், பூச்சிவிரட்டி, கற்பூரக் கரைசல், முட்டைக் கரைசல் மற்றும் நூண்ணோட்டம் ஆகிய இயற்கை வேளாண் இடுபொருட்களின் தயாரிப்பு முறை, பயன்படுத்தும் விதம் மற்றும் அவற்றின் பயன்கள் குறித்து விவசாயிகளுக்கு செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
இத்தகைய இயற்கை வேளாண் முறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் இரசாயன இடுபொருட்களின் பயன்பாட்டைக் குறைத்து, சாகுபடி செலவைக் குறைத்து, மண்ணின் வளத்தைப் பாதுகாத்து, சுற்றுச்சூழலுக்கு உகந்த நிலையான வேளாண்மையை மேற்கொள்ள முடியும் என மாணவிகள் எடுத்துரைத்தனர்.
பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகள் மாணவிகளின் செய்முறை விளக்கங்களை ஆர்வத்துடன் கேட்டறிந்து, இயற்கை வேளாண் இடுபொருட்களை தங்களது பண்ணைகளில் பயன்படுத்துவது தொடர்பான சந்தேகங்களை கேட்டறிந்தனர். மாணவர்களின் இத்தகைய களப்பணியானது விவசாயிகளுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான அறிவுப் பரிமாற்றத்தை மேம்படுத்தும் வகையில் அமைந்தது.

Leave A Reply

Your email address will not be published.