மாணவிக்கு பாலியல் தொல்லை : கோயில் தற்காலிக ஊழியர் கைது
திருச்சி, ஆக.24- மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கோயில் தற்காலிக ஊழியர் கைது செய்யப்பட்டார்
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள மருதூர் கிராமத்தை சேர்ந்த நீலகண்டனின் மகன் தமிழ்ச்செல்வன் (வயது 30). இவர் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தற்காலிக அடிப்படையில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 14 வயது சிறுமி, நர்சிங் பயிற்சி பள்ளியில் படித்து வருகிறார். அந்த சிறுமியிடம் தமிழ்ச்செல்வன் காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி அவரது செல்போன் எண்ணை பெற்றுள்ளார். இதையடுத்து அந்த சிறுமியிடம் பலமுறை நைசாக பேசி, அவரை சமயபுரத்தில் உள்ள தங்கும் விடுதிக்கு அழைத்து சென்று, தமிழ்ச்செல்வன், மற்றும் அவரது நண்பர் ஆகாஷ் ஆகியோர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.
இதற்கிடையே விடுதியில் இருந்த மாணவியான சிறுமியை காணவில்லை என்று விடுதி காப்பாளர், அவரது பெற்றோரிடம் தகவல் தெரிவித்தார். இதுகுறித்து சிறுமியின் தாய் தஞ்சை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து தேடுதலில் ஈடுபட்ட போலீசார், தஞ்சை பஸ்நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்த சிறுமியை மீட்டு விசாரணை நடத்தினர்.
இதில் அவருக்கு தமிழ்ச்செல்வன், ஆகாஷ் ஆகியோர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இது குறித்த புகாரின்பேரில் லால்குடி மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அஜீம், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தமிழ்ச்செல்வனை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ஆகாசை வலைவீசி தேடி வருகின்றனர்.