திருச்சியில் பயன்பாட்டுக்கு வராத அரசு கட்டிடங்கள்
திருச்சி, ஆக.24 திருச்சியில் கட்டி முடிந்தும் பயன்பாட்டுக்கு வராத கட்டிடங்களை பயன்பாட்டுக்கு கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காவல் உதவி மையம்
திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கருமண்டபம் பகுதியில் போலீஸ் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.. இந்நிலையில் விரிவாக்கம் பணியின் காரணமாக நெடுஞ்சாலை துறையினர் அதனை அகற்றிநர். இதனை தொடர்ந்து, போலீசார் மாற்று இடத்தில் தங்கி பணி புரியும் வகையில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் கோரையாறு பாலத்தின் அருகில் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு காவல் உதவி மையத்துக்கு புதிய கட்டிடம் ஒன்று கட்டி தரப்பட்டது. ஆனால், கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு 1½ ஆண்டுகள் கடந்த நிலையிலும், இன்னும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை. எனவே அந்த கட்டிடத்தை திறந்து போலீசாரின் ரோந்து பணி தொய்வின்றி நடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ரேஷன் கடை கட்டிடம்
திருச்சி ஆனந்தராஜ் நகர் பகுதியில் ரூ.17 லட்சத்தில் புதிதாக ரேஷன் கடை கட்டப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் திறந்து வைக்கப்பட்டது. அதன் பிறகு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்ததால் தேர்தல் நடைமுறை அறிவிப்பு வெளியானது.. இதனால் ரேஷன்கடை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படாமல் இருந்தது. தற்போது, தேர்தல் முடிந்து நடத்தை விதிகள் விலக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இன்னும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை. அதனை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.