டாஸ்மாக் ஊழியர் உள்பட 4 பேரிடம் பணம் பறிப்பு: 2 பேர் கைது
திருச்சி, ஆக.24- வெவ்வேறு சம்பவத்தில் டாஸ்மாக் ஊழியர் உள்பட 4 பேரிடம் பணம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் மடப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்(வயது 27). மருந்து விற்பனை பிரதிநிதி. வேலை சம்பந்தமாக திருச்சி வந்த கார்த்திக், ஒரு விடுதியில் அறைஎடுத்து தங்கியுள்ளார். சம்பவத்தன்று அவர் பொன்நகர் அணுகுசாலையில் நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கார்த்திக்கிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டனர். அவர் மறுத்ததால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் கார்த்திக்கை கத்தியால் தாக்கிவிட்டு, அவரிடம் இருந்து ரூ.2,100 மற்றும் செல்போனை பறித்து சென்றனர். இதுகுறித்து கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் திருச்சி பொன்மலைப்பட்டி ரெயில்வே காலனியை சேர்ந்தவர் பழனிசாமி(48). டாஸ்மாக் கடை ஊழியரான இவரிடம், சக்திவேல்(26) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.800-ஐ பறித்துசென்றார்.இதுகுறித்து பொன்மலைபோலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி உறையூர் வைக்கோல்கார தெருவை சேர்ந்த பிரபு(41) என்பவரிடம் கத்தியைகாட்டி மிரட்டி பணம் பறித்ததாக ராஜ்குமார் என்பவரை தில்லைநகர் போலீசார் கைது செய்தனர்.திருச்சி சிந்தாமணி பகுதியை சேர்ந்த பெஞ்சூர் ரகுமானிடம் (30) கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்ததாக முகில்குமார் (30) என்பவரை கோட்டை போலீசார் கைது செய்தனர்.