தகாத உறவால் வாலிபர் கொலை : இருவர் கைது
திருச்சி, ஆக. 31 திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், உப்பிலியபுரம் அருகே வாலிபர் மர்ம சாவில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்த பெண் உள்பட 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஒன்றியம் தென்புறநாடு ஊராட்சி பூதக்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 35). இவர் இ.சேவை மையமும், போட்டோ ஸ்டுடியோவும் நடத்தி வந்தார். இந்த நிலையில் கார்த்திக் கடந்த ஜூலை மாதம் 7-ந்தேதி அன்று பூதக்காலில் இருந்து டாப் செங்காட்டுப்பட்டி செல்லும் வழியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக உப்பிலியபுரம் போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இது தொடர்பாகஉப்பிலியபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கார்த்திக்கின் உறவினர்கள், நண்பர்கள், அவருடன் பழகி வந்தவர்களை கண்காணித்து ரகசியமாக விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் அதே பகுதியை சேர்ந்த நித்யா (25), சிலம்பரசன்பு (38) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தியதில் பல்வேறு திடுக்கிடும் தகவல் கிடைத்தது. மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த கார்த்திக்கிற்கு நித்யாவுடன் கள்ளக்காதல் ஏற்பட்டது.
அதே நேரத்தில் நித்யாவுடன் அதே பகுதியைச்சேர்ந்த சிலம்பரசன்பு (38) என்பவரும் கள்ள உறவில் இருந்து வந்ததாக தெரிகிறது. ஆனால் நித்யாவுக்கு கார்த்திக்கை பிடிக்கவில்லை.
ஆனாலும் தொடர்ந்து கார்த்திக் நித்யாவின் வீட்டுக்கு வந்ததாக தெரிகிறது. தங்களது உறவுக்கு கார்த்திக் இடையூறாக இருப்பதாக கருதிநித்யாவும், சிலம்பரசனும் அவரை கொலை செய்ய திட்டமிட்டனர்.
அதன்படி சம்பவத்தன்று இரவு நித்யா, செல்போனில் கார்த்திக்கை பூதக்காலில் டாப் செங்காட்டுப்பட்டிக்கு வரவழைத்தார். அங்கு இருவரும் சேர்ந்து கார்த்திக்கை அடித்துக் கொலை செய்தனர். பின்னர் தடயங்களை அழித்து மோட்டார் சைக்கிளில் விபத்தில் இறந்தது போன்று நாடகமாடியுள்ளனர். மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து உப்பிலியபுரம் போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி நித்யாவையும், சிலம்பரசனையும் நேற்று முன்தினம் அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.