மழை பெய்ய வேண்டி கஞ்சி கலயம் எடுத்து ஒப்பாரி வைத்த பெண்கள்
திருச்சி, ஆக.31 மழை பெய்ய வேண்டி கஞ்சி கலயம் எடுத்து ஒப்பாரி வைத்த பெண்கள்
குழுமணி அருகே மழை பெய்ய வேண்டி கஞ்சி கலயம் எடுத்து, ஒப்பாரி வைத்து பெண்கள் வினோதவழிபாட்டில் ஈடுபட்டனர்.
மேட்டூர் அணையிலிருந்து கடந்த ஜூன் மாதம் சாகுபடிக்குத் தண்ணீர் திறக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் போதிய அளவு தண்ணீர் இல்லாததால்மேட்டூர் அணை இந்த ஆண்டு திறக்கப்படவில்லை. இதனால் நடப்பாண்டில் குறுவை, சம்பா சாகுபடி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. காவிரி ஆறு தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது.
நிலத்தடி நீர்மட்டமும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் பொதுமக்கள் குடிப்பதற்கும், விவசாய பாசனத்திற்கும் போதிய தண்ணீர் வசதி இல்லாமல் மக்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக காவிரி கரையோரம் உள்ள ஊராட்சி ஆழ்குழாய் கிணற்றில் கூட போதிய அளவு தண்ணீர் இல்லாததால், ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் மழை பெய்ய வேண்டி குழுமணி அருகே உள்ள அயிலாபேட்டை கிராமத்தில் பெண்கள் கஞ்சி கலயம் எடுத்து, ஒப்பாரி வைத்து வழிப்பட்டனர். இதைையொட்டி ஒப்பாரி வைப்பதற்காக தொட்டியம் பகுதியில் இருந்து ஏராளமான பெண்களை அழைத்து வந்தனர். அவர்களோடு அயிலாபேட்டை பகுதியில் உள்ள பெண்களும் சேர்ந்து ஒப்பாரி வைத்தனர். இந்த நிகழ்ச்சி கடந்த வியாழக்கிழமை அன்று தொடங்கியது. அன்றிரவு பலரது வீட்டில் சமைக்கப்பட்ட உணவுகளை மண்பானையில் வாங்கி மூன்று இடங்கள் சந்திக்கும் இடத்தில் மனிதன் போல் மண்ணால் உருவம் செய்து, அதற்கு பூக்கள் மற்றும் மாலைகளை அணிவித்து, சாப்பாடு கொண்டு வரப்பட்ட மண் பானைகளை தலைப்பகுதியில் வைத்து ஏராளமான பெண்கள் ஒப்பாரி வைத்தனர்.
ஒப்பாரி வைத்தனர் தொடர்ந்து நடைபெற்ற இந்தநிகழ்ச்சியானது நேற்று முன்தினம் நிறைவுபெற்றது. அன்றிரவு மழை வேண்டி ஏராளமான பெண்கள் ஒப்பாரி வைத்தனர். பின்னர் படையலிட்ட உணவுகளை அந்த பகுதியில் உள்ள வாய்க்காலில் கொண்டு விட்டு, திரும்பிச் சென்றனர். இந்த வினோத வழிபாட்டில் பலர் கலந்து கொண்டனர்.