டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியைத் தடுக்க “கம்புசியா” மீன்களை நீர்நிலைகளில் விடும் பணி

0 12
Stalin trichy visit

திருச்சி, செப்.10 திருச்சி மாநகராட்சி பகுதியில் டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியைத் தடுக்க நீர்நிலைகளில் 10 ஆயிரம் கம்புசியா மீன்கள் விடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 65 வார்டுகளிலும் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நகர்நல அலுவலர் டாக்டர் கார்த்திகேயன் தலைமையில் 400 கொசுஒழிப்பு பணியாளர்கள் இந்தபணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

முதல்கட்டமாக, மாநகராட்சி 5 மண்டலத்திற்கு உட்பட்ட 65 வார்டுகளில் மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் மற்றும் கொசு ஒழிப்பு பணியாளர்கள், காய்ச்சல் கண்காணிப்பு மற்றும் கொசுப் புழு ஆய்வு பணிகளின் அடிப்படையில் கொசுப்புழு பெருக்கம் அதிகம் காணப்படும் பகுதிகளை கண்டறிந்து, கிணறுகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் கம்புசியா மீன்கள் விடும் பணியை தொடங்கி உள்ளனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

ஒவ்வொரு நாளும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள 187 மருத்துவமனைகள், 15 ஆய்வுங்களில் காய்ச்சல் மற்றும் தொற்று நோய் கண்டறியப்பட்டால், அதுதொடர்பாக அறிக்கை பெற்று, நோய் பாதித்தவர்கள் வசிக்கும் பகுதியில் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், மலேரியா, டெங்கு கொசுக்களை அழிக்கக்கூடிய கம்புசியா மீன்களை மாநகராட்சி நிர்வாகமே தொட்டிகளில் உற்பத்தி செய்கிறது. ஆண் மீன் சிறியதாகவும், பெண் மீன் பெரியதாகவும் இருக்கும். ஒரு கிணற்றில் 2 ஆண், 8 பெண் மீன் என்ற விகிதத்தில் விடப்படும். வளர்ந்த மீன் 100 முதல் 300 கொசுப்புழுக்களை உண்ணும்.

இத்தகைய மீன்கள் விடப்பட்ட கிணற்று மற்றும் நீர்நிலைகளில் பிளீச்சிங் பவுடர் மற்றும் ஆயில் போன்றவற்றை தெளிக்கக்கூடாது. இதன் வாழ்நாள் ஒரு ஆண்டு ஆகும்.

மாநகர் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் விட 10 ஆயிரம் கம்புசியா மீன்கள் மாநகராட்சியில் சிறிய பிளாஸ்டிக் டப்பாக்களில் இந்த மீன்கள் தனித்தனியாக பிரித்து வைக்கப்பட்டுள்ளன.

இப்பணியில் 400 கொசு ஒழிப்பு பணியாளர்கள், 36 சுகாதார ஆய்வாளர்கள், 5 மண்டல சுகாதார அலுவலர்கள் மற்றும் துப்புரவு ஆய்வாளர்கள் அடங்கிய தனிக்குழு ஈடுபட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave A Reply

Your email address will not be published.