பெண் உள்பட 2 பேரிடம் ஆன்லைன் மூலம் ரூ.3 1/2 லட்சம் மோசடி
திருச்சி, செப். 28 திருச்சி பால்பண்ணை பகுதியை சேர்ந்த 39 வயது பெண் ஒருவரின் செல்போனுக்கு, பாரதி என்ற டெலிகிராம் ஐ.டி.யில் இருந்து ஆன்லைன் முதலீடு தொடர்பான ஒரு தகவல் வந்தது. அதனை அவர் திறந்து பார்த்தபோது, சில பணிகளை செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்று கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து அந்த பெண் ஆன்லைனில் அவர்கள் கொடுத்த சில பணிகளை செய்து, ஒரு குறிப்பிட்ட தொகையைப் பெற்றார்.
பின்னர், அடுத்த கட்ட பணிகளை செய்வதற்கு முன்பணம் செலுத்த வேண்டும் என மர்ம நபர்கள் கூறியுள்ளார். அதை நம்பி, அந்த பெண் வங்கி கணக்குகள் வழியாகமொத்தம் ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 799 அனுப்பியுள்ளார். ஆனால் அவர்கள் கூறியபடி பணம் கிடைக்கவில்லை. இதேபோல் திருச்சி உரையூர் பகுதியை சேர்ந்த ரெங்கநாதன் (63) செல்போன் எண்ணிற்கு கடந்த 15-ந்தேதி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் சாலை விதி முறைகளை மீறியதாக கூறி ரூ.1000 அபராதம் விதித்துள்ளதாக இருந்தது. இதையடுத்து ரெங்கநாதன் அந்த லிங்கை கிளிக் செய்த சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.2 லட்சத்து 49 ஆயிரத்து 106 எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது. இந்த சம்பவங்கள் குறித்த புகாரின்பேரில் திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.