நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறுவதற்கான தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி: வேளாண் கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு

0 17
Stalin trichy visit

நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறுவதற்கான தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி. வேளாண் கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு.

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகிலுள்ள கோவில்வெண்ணியில், எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் (M. S. Swaminathan Research Foundation – MSSRF) மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிதியம் (Environmental Defense Fund) இணைந்து நடத்திய, நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறுவதற்கான தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி நிகழ்ச்சியில், கீழ்வேளூர் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவர்கள் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில், நெல் சாகுபடியில் தழைச்சத்து (நைட்ரஜன் – N), மணிச்சத்து (பாஸ்பரஸ் – P), சாம்பல்சத்து (பொட்டாசியம் – K) ஆகிய மூன்று முக்கிய பேரூட்டச்சத்துகளின் பங்கு மற்றும் அவற்றைச் சமச்சீரான முறையில் பயிர்களுக்கு வழங்குவதன் அவசியம் குறித்து வல்லுநர்கள் விரிவாக எடுத்துரைத்தனர்.

நெற்பயிரின் வேர் வளர்ச்சி, தூர் உருவாக்கம், தாவர வளர்ச்சி, கதிர் உருவாக்கம் மற்றும் மணிகள் நிரம்புதல் ஆகியவற்றில் NPK ஊட்டச்சத்துகள் வகிக்கும் பங்கு குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. மேலும், உரங்களைப் பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட அதிகமாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

குறிப்பாக, தழைச்சத்து உரங்களை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவதால் தேவையற்ற தழை வளர்ச்சி, பயிர்கள் சாய்ந்து விழும் அபாயம் மற்றும் பயிர் முதிர்ச்சி தாமதமடைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும் என விளக்கப்பட்டது. அதேபோல், ஊட்டச்சத்துகளைச் சமநிலையற்ற முறையில் பயன்படுத்துவது மண் வளத்தையும் சுற்றுச்சூழலையும் பாதிப்பதுடன், விவசாயிகளின் உற்பத்திச் செலவையும் அதிகரிக்கக்கூடும் என எடுத்துரைக்கப்பட்டது.

மண் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் உரங்களைப் பயன்படுத்துதல், பயிரின் வளர்ச்சி நிலைகளுக்கு ஏற்ப உரமிடுதல் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட அளவுகளில் ஊட்டச்சத்துகளை வழங்குதல் ஆகியவற்றின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது.

இப்பயிற்சி நிகழ்ச்சி, கீழ்வேளூர் வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் நெல் சாகுபடியில் அறிவியல் சார்ந்த உர மேலாண்மை முறைகளைப் புரிந்துகொள்ளவும், மண் வளத்தைப் பாதுகாத்து நிலையான வேளாண் உற்பத்தியை மேம்படுத்துவதற்கான நடைமுறை அறிவைப் பெறவும் பயனுள்ளதாக அமைந்தது.

Leave A Reply

Your email address will not be published.