இலை வண்ண அட்டை குறித்து செயல் விளக்கம் அளித்த வேளாண் கல்லூரி மாணவிகள்

0 16
Stalin trichy visit

இலை வண்ண அட்டை குறித்து செயல் விளக்கம் அளித்த வேளாண் கல்லூரி மாணவிகள்.

நெல் பயிரில் தழைச்சத்தின் தேவையை அறிந்து, உரச் செலவைக் குறைத்து, பயிரின் வளர்ச்சியை மேம்படுத்த இலை வண்ண அட்டவணை (Leaf Colour Chart – LCC) பயன்படுகிறது.
இலை வண்ண அட்டவணை என்பது நெல் இலைகளின் பச்சை நிறத்தின் அடிப்படையில், பயிருக்கு எவ்வளவு தழைச்சத்து தேவை என்பதைத் தீர்மானிக்க உதவும் எளிய தொழில்நுட்பமாகும். இதன் மூலம் பயிரின் தழைச்சத்து நிலையை மதிப்பிட்டு, தேவையான நேரத்தில் சரியான அளவு தழைச்சத்து உரத்தை வழங்க முடியும்.
நெல் பயிரில் நடவு செய்த பிறகு, குறிப்பிட்ட இடைவெளிகளில் இலைகளின் நிறத்தை இலை வண்ண அட்டவணையுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். வயலின் பல்வேறு பகுதிகளில் ஆரோக்கியமான பயிர்களின் இலைகளைத் தேர்ந்தெடுத்து நிறத்தை ஒப்பிடுவதன் மூலம் தழைச்சத்து தேவையை அறியலாம். இலைகளின் நிறம் அட்டவணையில் குறிப்பிடப்பட்ட அளவைவிடக் குறைவாக இருந்தால், பரிந்துரைக்கப்பட்ட அளவில் தழைச்சத்து உரத்தை இட வேண்டும். நடவு பயிருக்கு நெல் நடவுக்கு பிறகு 14 நாட்கள் கழித்தும், நேரடி ஈர விதைப்பிற்கு 21 நாட்கள் பிறகும், இறுதியாக பயிர் பூக்க துவங்குவதற்கு முன்பும் இலைவண்ண அட்டவணையை பயன்படுத்தி இலையின் நிறத்தை ஒப்பிடுதல் வேண்டும். மேலும் குறுவைப் பயிருக்கு ஏழு நாட்களுக்கு ஒரு முறையும் ,சம்பா- தாளடி பயிர்களுக்கு 10 நாட்களுக்கு ஒரு முறையும் அளவு எடுத்தல் வேண்டும்.

இலை வண்ண அட்டவணையின் நன்மைகள்: தேவைக்கேற்ப தழைச்சத்து உரமிட உதவுகிறது.
உரச் செலவைக் குறைக்கிறது.
நெல் பயிரின் வளர்ச்சியையும் மகசூலையும் மேம்படுத்துகிறது. அதிகப்படியான தழைச்சத்து பயன்பாட்டைக் குறைக்கிறது. சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்க உதவுகிறது.
உரத்தைச் சரியான நேரத்தில் பயன்படுத்த வழிவகுக்கிறது.

எனவே, இலை வண்ண அட்டவணையைப் பயன்படுத்தி தழைச்சத்து மேலாண்மை செய்வது, விவசாயிகள் உரச் செலவைக் குறைத்து நிலையான நெல் உற்பத்தியைப் பெற உதவும் சிறந்த தொழில்நுட்பமாகும். கீழ்வேளூரில் உள்ள வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயிலும் இறுதியாண்டு மாணவி இலை வண்ண அட்டவணையின் முக்கியத்துவம் குறித்து கோவில் வெண்ணி விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார்.

Leave A Reply

Your email address will not be published.