மண் மாதிரி சேகரிக்கும் முறை குறித்து விவசாயிகளுக்கு விளக்கிய வேளாண் கல்லூரி மாணவி

0 20
Stalin trichy visit

மண் மாதிரி சேகரிக்கும் முறை குறித்து விவசாயிகளுக்கு விளக்கிய வேளாண் கல்லூரி மாணவி.

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரில் உள்ள வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயிலும் இறுதியாண்டு மாணவிகள் வடவூர் தென்பாதி கிராமத்தில் விவசாயிகளுக்கு மண்ணின் வளத்தை அறிந்து, பயிர்களுக்கு ஏற்ற உர மேலாண்மையை மேற்கொள்ள மண் பரிசோதனை மிகவும் அவசியமாகும் என அறிவுறுத்தினர். இதற்காக மண் மாதிரிகளைச் சேகரிக்கும் போது விவசாயிகள் சரியான வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.மண் மாதிரிகள் சேகரிப்பதற்கு முன்பு நிலத்தின் அமைப்பு, நிறம், நிலச்சரிவு, நீர்ப்பாசன வசதி மற்றும் பயிர் சாகுபடி முறைகளைப் பொறுத்து நிலத்தைப் பல பகுதிகளாகப் பிரிக்க வேண்டும். ஒரே மாதிரியான மண் தன்மை கொண்ட பகுதிகளில் இருந்து தனித்தனியாக மண் மாதிரிகளைச் சேகரிக்க வேண்டும்.

நிலம் தரிசாக இருக்கும் காலத்தில் மண் மாதிரிகளைச் சேகரிப்பது சிறந்தது. உரமிட்ட உடனோ அல்லது பயிர் சாகுபடி செய்துள்ள நிலத்திலோ மண் மாதிரிகளைச் சேகரிக்கக் கூடாது. குறிப்பாக, உரமிட்டுப் பயிர் அறுவடை செய்த பிறகு குறைந்தது மூன்று மாத இடைவெளிக்குப் பின்னரே மண் மாதிரிகளைச் சேகரிக்க வேண்டும்.
மண் மாதிரி எடுக்கும் இடத்தில் உள்ள இலை, சருகு, புல் மற்றும் செடி ஆகியவற்றை அகற்றிவிட்டு, ‘V’ வடிவில் குழி எடுத்து மேல்மண்ணை நீக்க வேண்டும். பின்னர் நிலத்தின் மேற்பரப்பிலிருந்து 0–15 செ.மீ. அல்லது பயிருக்கு ஏற்ற ஆழத்தில் மண்ணைச் சேகரிக்க வேண்டும்.

ஒரு ஏக்கர் நிலத்தில் குறைந்தது 10 முதல் 20 இடங்களில் மண் மாதிரிகளைச் சேகரித்து, அவற்றை நன்கு கலந்து ஒரே மாதிரியான கலவையாகத் தயாரிக்க வேண்டும். மண் மாதிரியில் கற்கள், வேர்கள் மற்றும் பயிர்க் கழிவுகள் இருந்தால் அவற்றை நீக்க வேண்டும். சேகரித்த மண்ணை நிழலில் உலர்த்தி, சுத்தமான துணிப்பை அல்லது மண் மாதிரி சேகரிப்புப் பையில் நிரப்பி, விவரங்களைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.
மேலும், உரிய முறையில் சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகளை அருகிலுள்ள மண் பரிசோதனை ஆய்வகத்திற்கு அனுப்பி பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இதன் மூலம் மண்ணில் உள்ள சத்துக்களின் அளவை அறிந்து, தேவையான உரங்களைச் சரியான அளவில் பயன்படுத்த முடியும். இதனால் உரச் செலவைக் குறைத்து, மண் வளத்தைப் பாதுகாத்து, பயிர் மகசூலை அதிகரிக்கலாம் என வேளாண் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.