ஆதரவற்ற தாயின் மகனை நல்லடக்கம் செய்த பெண் சமூக ஆர்வலர் – தஞ்சை அருகே ஒரு நிகழ்ச்சி சம்பவம்!
தஞ்சாவூர் அருகே ஆதரவற்ற தாய் ஒருவர் தனது மகனுடன் பேருந்து நிலையத்தில் வசித்து வந்த நிலையில் உடல் நிலை குறைபாட்டால் அவரது மகன் இறந்து விட ஆறுதல் சொல்ல கூட ஆள் இல்லாமல் அந்த தாய் தனி ஆளாக கதறியுள்ளார். இதை அறிந்த சமூக ஆர்வலர் பெண் ஒருவர் ஒரு நாள் முழுக்க கூட இருந்ததுடன் சுடுகாடு வரை சென்று ஆதரவற்ற தாயின் மகன் உடலை அடக்கம் செய்ய உதவிய சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள நாடாகாடு கிராமத்தை சேர்ந்தவர் பாக்கியலெட்சுமி. இவரது கணவர் திருநீலகண்டன் 5 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். பாக்கியலெட்சுமி 6 ம் வகுப்பு படிக்கும் தனது மகள் சாம்பவியுடன் வசித்து வருகிறார். தென்னை விவசாயத்தில் ஈடுபட்டு வரும் பாக்கிய லெட்சுமிக்கு அதில் கிடைக்க கூடிய வருமானமே வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. கஜா புயலில் கிடைத்த நிவாரணப் பணத்தில் பேராவூரணி அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளிக்கு வாலி பால் மைதானம் (கோட்)அமைத்து கொடுத்துள்ளார்.
தந்தையின் நினைவு நாளுக்காக தன் மகள் சாம்பவி சேமித்த பணத்தை கொரோனா நிவாரண நிதிக்காக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.

இதற்காக மாவட்ட ஆட்சியர் சான்றிதழ் வழங்கி பாராட்டியதும் குறிப்பிடத்தக்கது. பேராவூரணி பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆண்கள்,பெண்கள் என சுமார் 100 ஆதரவற்றவர்கள் சாலையோரத்தில் வசித்து வருகின்றனர்.கொரோனா பாதிப்பால் அவர்கள் உணவின்றி தவித்ததை அறிந்த பாக்கியலெட்சுமி அன்பில் நாம் அறக்கட்டளை,அன்னம் பகிர்ந்திடு என்ற பெயரில் கடந்த 90 நாள்களாக தினமும் மதிய உணவு வழங்கி ஆதரவற்றவர்களின் பசி போக்கி வருகிறார்.
இந்நிலையில் பேராவூரணி பேருந்து நிலையத்தில் மனவளர்ச்சி குன்றிய தனது 47 வயது மகன் முத்துகிருஷ்ணனுடன் சந்திரா (65) என்ற முதியவர் ஆதரவின்றி வசித்து வந்துள்ளார். மகனுக்கு வந்த மாற்றுத் திறனாளி உதவித்தொகை,தனக்கு கிடைத்த முதியோர் உதவித்தொகை ஆகியவை உடல் நிலை பாதிக்கப்பட்ட முத்து கிருஷ்ணனின் சிகிச்சைக்கு செலவாகிவிட பேருந்து நிலையத்திற்கு வந்து கொடுக்கப்படும் உணவை வாங்கி தன் மகனுக்கும் கொடுத்து தானும் சாப்பிட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை முத்துகிருஷ்ணன் இறந்து விட தனக்கு ஆதரவாக இருந்த மகனும் என்னை தனியாக தவிக்க விட்டுட்டு போயிட்டானேனு உடல் முன்பு கதறியது பலரையும் கலங்க வைத்தது.அங்கிருந்த சிலர் சந்திராவிடம் பணம் கொடுக்க என் மகனே போயிட்டான் பணத்தை வச்சு என்ன பண்ண போறேன் அவனுக்கான கடைசி காரியத்தை மட்டும் செஞ்சு கொடுத்த அவன் ஆத்மா நிம்மதியா அடங்கிடுமுனு கலங்கியுள்ளார்.
இதையடுத்து உடல் கூறாய்விற்காக முத்துகிருஷ்ணன் உடல் பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது.மகன் மார்ச்சுவரியில் கிடத்தப்பட்டு கிடக்க ஆறுதல் சொல்லி தேற்ற கூட ஆளில்லாமல் சந்திரா தனி ஆளாக கதறியது பலருக்கு கண்ணீரை வர வழைத்தது.இதையறிந்த பாக்கியலெட்சுமி மருத்துவமனைக்கு வந்து சந்திராவிற்கு துணையாக நின்றதுடன் ஆறுதல் வார்த்தைகளை கூறி தேற்றியிருக்கிறார்.
பாக்கியலெட்சுமி கையை பற்றிக்கொண்ட சந்திரா எனக்குனு யாரும் இல்ல கடைசி வரைக்கும் எங்கூட நின்னுமானு கண்கள் கலங்கி யிருக்கிறார்.உதவிக்கு ஆளில்லாமல் மருத்துவமனையின் பார்மாலிட்டிக்காக பாக்கியலெட்சுமி அல்லாடி கொண்டிருந்ததை கவனித்த திருக்குறள் பேரவையின் உறுப்பினரான செந்தில்குமார் தானும் சந்திராவிற்கு துணையாக நின்றுள்ளார்.
இந்த தகவல் பேராவூரணி எம்.எல்.ஏ அசோக்குமார் கவனத்திற்கு செல்ல அவர் முத்துகிருஷ்ணனின் இறுதி சடங்கிற்கான செலவை ஏற்றுக் கொண்டார்.உடல் கூறு ஆய்வு முடிந்து உடல் ஒப்படை க்கப்பட்டதும் சுடுகாட்டிற்கு எடுத்து செல்லப்பட்டது.பாக்கிய லெட்சுமியும் சுடுகாட்டிற்கு புறப்பட்ட அங்கிருந்த பெண்கள் சிலர் நாமா சுடுகாட்டுக்கு போக கூடாதுனு தடுத்துள்ளனர். சந்திரா மட்டும் போய் அங்க அழுது கொண்டிருப்பாங்க அவங்கள தேற்ற யாராவது கூட இருக்கனும் பரவாயில்ல நான் போறேனு சொல்லிட்டு சுடுகாட்டிற்கு சென்றுள்ளார்.

பின்னர் பாக்கியலெட்சுமி,செந்தில்குமார்,போலீஸ் ஏட்டு சக்திவேல் உள்ளிட்டோர் சுடுகாட்டிற்கு சென்றதுடன் பேரூராட்சி ஊழியர்களின் உதவியுடன் உடலை அடக்கம் செய்தனர்.இனி நான் இருந்து என்ன பண்ணப் போறேன் என் மகனோடு சேர்த்து என்னையும் புதைச்சுடுங்கனு சந்திரா கதற மகளாக இருந்து நான் பார்த்துக்குறேனு சொல்லி சந்திராவை நெஞ்சில் சாய்த்துக் கொண்டார்.பொதுவாக பெண்கள் சுடுகாட்டிற்கு செல்ல மாட்டார்கள் அதுவும் கிராமங்களில் சுத்தமாக பெண்கள் செல்வதே கிடையாது.
இந்நிலையில் ஒரு நாள் முழுக்க ஆதவற்ற தாயுடன் இருந்து சுடுகாடு வரை சென்று உடலை அடக்கம் செய்வது வரை இருந்து அனைத்தையும் செய்திருக்கிறார்.
சந்திராவிற்கு புதிய உடைகள் உள்ளிட்டவை வாங்கி கொடுத்து அவர் தற்காலிகமாக தங்குவதற்கான ஏற்பாட்டையும் செய்து கொடுத்திருக்கிறார். மருத்துவமனையில் தொடங்கி பலவற்றிற்கு ரூ 4,000 வர செலவாகியிருக்கிறது அதனை தானே செய்திருக்கிறார்.போலீஸ் ஏட்ட்டு சக்திவேல் ஒரு பெண்ணா இருந்துக்கிட்டு தைரியமா சுடுகாடு வரை வந்துடன் தேவையானதையும் செய்து கொடுக்குறீங்களேனு நெகிழ்ந்திருக்கிறார் பாக்கியலெட்சுமியின் இந்த செயல் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
பாக்கியலெட்சுமியிடம் பேசினோம், ஆதரவற்றவர்களுக்கு தினமும் மதியம் உணவு கொடுத்து வருகிறேன் அப்ப சந்திராவிற்கும்,அவரது மகனுக்கும் கொடுப்பேன்.பணமும் இல்ல,ஜனமும் இல்ல அதனால் ஆதரவற்று கிடக்கிறோம் என சந்திரா கண்கள் கலங்க அடிக்கடி கூறுவார்.தன் மகனுக்காவே தான் வாழ்ந்து கொண்டிருப்பதாக கூறுவார்.மகன் பிரிவை தாங்க முடியாமல் சந்திரா தவித்த தவிப்பை ஒரு பெண்ணாக என்னால் உணர முடிந்தது அதுவே என்னை சுடுகாடு வரை செல்ல வைத்தது.காரியம் முடிஞ்ச பிறகு அந்த துயரமான நேரத்திலும் உனக்கு பெரிய மனசும்மானு என்னை தழுவி கொண்டார்.ஆதரவுக்கு யாருமின்றி துயரத்தில் தவிப்பவர்களுக்கு நான் இருக்கேனு சொன்னாலே அவர்களுக்கு தானா நிம்மதி வந்து சேர்ந்துடும் என்றார்.