ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்காவில் பார்வையாளர்களை கவருவதற்காக சென்சாரில் இயங்கும் எலக்ட்ரானிக் தேனீ-வண்ணத்துப்பூச்சி பூங்கா அமைப்பு
திருச்சி மண்டல தலைமை வனப்பாதுகாவலரின் அறிவுறுத்தலின்படி, மாவட்ட வன அலுவலர் வழிகாட்டுதல்படி, திருச்சி ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்காவில் பார்வையாளர்களை கவரும் வகையில் புதிதாக கை அசைவுக்கேற்ப சிறகுகள் விரிக்கும் வகையில் சென்சாரில் இயங்கும் எலக்ட்ரானிக் தேனீ மற்றும் வண்ணத்துப்பூச்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே மேலூரில் உள்ள ஆசியாவின் மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சி பூங்காவில் 300-க்கும் மேற்பட்ட தாவர இனங்கள், 125-க்கும் மேற்பட்ட வண்ணத்துப்பூச்சி இனங்கள், 100-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் காணப்படுகின்றன.
மேலும், குழந்தைகளுக்கான விளையாட்டு சாதனங்கள்,செயற்கை குடில்கள், செயற்கை நீரூற்றுகள், சிறு மரப்பாலங்கள், குழந்தைகளுக்கான படகு குழாம், பல்வேறு வகையான தாவர வகைகளுடன் உள்ள நட்சத்திரவனம், வண்ணத்துப்பூச்சிகள் குறித்து விளக்கும் காட்சிக்கூடம் போன்றவையும் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை பார்வையிட தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஆராய்ச்சி மாணவ-மாணவிகள், சுற்றுலா பயணிகள் அதிகஅளவில் வந்து செல்கிறார்கள். அதற்கேற்ப இங்கு புதிய திட்டங்கள் மற்றும் கூடுதல் வசதிகளை மேம்படுத்தி தரும் முயற்சியில் வனத்துறை ஈடுபட்டு வருகிறது.
இதில் குழந்தைகளுக்கான ரெயில், பேட்டரி கார், குழந்தைகளுக்கான பலூன் விளையாட்டுக்கள் சில மாதங்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்டன. வண்ணத்துப்பூச்சி பூங்காவில் அவ்வப்போது புதிய, புதிய மாற்றங்களை கொண்டு வந்தால் தான் அதிகஅளவில் பார்வையாளர்களை ஈர்க்க முடியும். மேலும், ஏற்கனவே இங்கு வந்து பார்த்து சென்றவர்கள் கூட புதிய அனுபவத்துக்காக மீண்டும் வருவார்கள்.
தற்போது சென்சார் மூலம் இயங்கும் எலக்ட்ரானிக் தேனீ மற்றும நீல மயில் அழகன், இச்சை மஞ்சள் அழகி இனங்களை சேர்ந்த எலக்ட்ரானிக் வண்ணத்துப்பூச்சிகள் பொருத்தப்பட்டு வருகின்றன. தீபாவளி பண்டிகைகால விடுமுறைக்காக வண்ணத்துப்பூச்சி பூங்காவுக்கு வரக்கூடிய பார்வையாளர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி தரக்கூடியதாகவும், ஈர்க்கக்கூடியதாகவும் இவை இருக்கும். அதற்கேற்ப பணிகளை விரைந்து மேற்கொண்டுள்ளோம் என மாவட்ட வன அலுவலர் கிரண் தெரிவித்துள்ளார்.