கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக தக்காளியின் வரத்து குறைந்துள்ளதாலும், விளைச்சல் குறைந்துள்ளதாலும் தக்காளியின் விலை அதிகரித்து காணப்படுகிறது. திருச்சி காந்தி மார்க்கெட்டைப் பொறுத்தவரை திருச்சி மாவட்டத்தின் வையம்பட்டி மற்றும் பிற மாவட்டங்களிலிருந்தும், ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் தக்காளி இறக்குமதி செய்யப்படுகிறது.
திருச்சி காந்தி மார்க்கெட் விலை நிலவரப்படி… மொத்த விற்பனையில் கிரேடு 1 தக்காளி கிலோ ஒன்றுக்கு 55 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இரண்டாம் ரக தக்காளி கிலோ ஒன்றுக்கு 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மொத்த விற்பனையில் விலை அதிகரித்துள்ளதன் காரணமாக, சில்லரை விற்பனையில் தக்காளியின் விலை கடும் விலை உயர்வை சந்தித்துள்ளது.
கடந்த வாரங்களில் கிலோ ஒன்றுக்கு 40 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்த தக்காளி, தற்போது சில்லரை விலையில் ஒரு கிலோவிற்கு 60 ரூபாய் முதல் 90 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மழை பாதிப்பு குறைந்து வரத்து அதிகரித்தால் மட்டுமே விலை குறைய வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.