விபத்து ஏற்படுத்திய வாகனத்தை துரிதமாக பிடித்த போலீசாருக்கு சூப்பிரண்டு பாராட்டு
திருச்சி மாவட்டம், தொட்டியம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட தொட்டியம் முடக்குசாலை அருகே மோட்டார் சைக்கிள் மீது கியாஸ் நிறுவன லாரி மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதுபற்றி தகவல் அறிந்த வையம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினோத்குமார், போலீஸ் ஏட்டு அங்கமுத்து மற்றும் போலீசார் சுப்பிரமணி, கவிராஜ் ஆகியோர் லாரியை மடக்கி பிடித்து தொட்டியம் போலீஸ்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதுபோல் மணப்பாறை போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட வெள்ளைகால் அருகே மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற காரை நெடுஞ்சாலை ரோந்து போலீஸ் ஏட்டு ஜெகநாதன், சுரேஷ்பாண்டி, ஜெயக்குமார், பிரபாகரன் ஆகியோர் சுமார் 10 கிலோமீட்டர் தூரம் விரட்டிச்சென்று பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விபத்து உண்டாக்கிய வாகனங்களை துரிதமாக செயல்பட்டு பிடித்த போலீசாரை திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பா.மூர்த்தி நேரில் வரவழைத்து சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.