திருச்சி மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள் சங்கம் சார்பில் முற்றுகை போராட்டம்
திருச்சி மாநகராட்சியில் அனைத்து வார்டுகளிலும் சுயஉதவிக்குழு அடிப்படையில் தூய்மைப்பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு மாவட்ட கலெக்டர் 2021-2022-ம் ஆண்டுக்கு தீர்மானித்த தினக்கூலி ரூ.557 வழங்கப்பட்டு வந்தது. கடந்த அக்டோபர் மாதம் தினக்கூலி ரூ.96 குறைக்கப்பட்டு ரூ.461-ஐ மாநகராட்சி நிர்வாகம் வழங்கி உள்ளது.
தினக்கூலியை குறைத்ததை கண்டித்து திருச்சி மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள் சங்கம்(சி.ஐ.டி.யு) சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் இளையராஜா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ராஜூ முன்னிலை வகித்தார். செயலாளர் மணிமாறன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதைத்தொடர்ந்து சங்க நிர்வாகிகள் மாநகராட்சி ஆணையாளர் முஜிபுர்ரகுமானை சந்தித்து கோரிக்கைகள் குறித்து மனு கொடுத்தனர்.
அப்போது, தமிழகம் முழுவதும் ஒரே தினக்கூலி வழங்கும்படி உத்தரவு வந்துள்ளதால் அதன்படி தினக்கூலி வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இதைத்தொடர்ந்து நிர்வாகிகள் அடுத்த கட்ட போராட்டம் குறித்து கலந்தாலோசனை செய்வதாக கூறினர். இதைத்தொடர்ந்து தூய்மைப்பணியாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.