திருச்சி தோட்டக்கலை துணை இயக்குனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அனைவரும் தங்கள் பகுதிகளில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் மூலம் தாங்கள் பயிரிட்டுள்ள தோட்டக்கலை பயிர்களை இ- அடங்கலில் பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வரும் காலங்களில் அதிக கனமழை கணிக்கப்பட்டிருக்கும் நிலையில் விவசாயிகள் அனைவரும் தாங்கள் சாகுபடி செய்த வாழை, வெங்காயம், மரவள்ளி மற்றும் மிளகாய் (வற்றல்) போன்ற தோட்டக்கலை பயிர்களுக்கு பாரத பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் 2021-22 -ம் ஆண்டு ராபீ பருவத்திற்கு காப்பீடு செய்து பயன் பெறலாம்.வாழை மற்றும் மரவள்ளி பயிருக்கு 28.02.2022-ம், வெங்காய பயிருக்கு 15.02.2022-ம் மற்றும் மிளகாய் (வற்றல்) பயிருக்கு 31.01.2022-ம் வரையிலும் விண்ணப்பிக்கலாம்.
பிரீமியம் தொகையாக ஏக்கர் ஒன்றிற்கு வெங்காய பயிருக்கு ரூ.1,978, வாழைக்கு ரூ.3,238, மரவள்ளி பயிருக்கு ரூ.1,528, மற்றும் மிளகாய் (வற்றல்) பயிருக்கு ரூ.1,120-ம் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் அல்லது இ- சேவை மையங்களில் செலுத்தி பயிர் காப்பீடு செய்து பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.