லாரி மோதியதில் சமயபுரம் நுழைவு வாயில் தூண் சேதம்
திருச்சி, ஆக. 3 திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சமயபுரம் நால்ரோடு பகுதியில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவில் நுழைவு வாயில் வளைவு மீது லாரி மோதியது. வளைவு முற்றிலும் சேதம் அடைந்துள்ளதால் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் பக்தர்கள் கவலை அடைந்துள்ளனர்.
சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமாக திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் திகழ்ந்து வருகிறது. இக்கோவிலுக்கு சமயபுரம் நால்ரோடு பகுதியில் பழைய திருச்சி- சென்னை சாலையில் நுழைவு வாயில் வளைவு அமைக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் பால்குடம், அக்னி சட்டி உள்ளிட்ட நேர்த்திக்கடன் செலுத்துவதற்கு இந்த வளைவு பகுதியில் இருந்து புறப்பட்டு கோவிலுக்கு வருவார்கள். அதுமட்டுமின்றி வெளியூர் செல்வோர் வாகனங்களை நுழைவு வாயில் வளைவு அருகே நிறுத்திவிட்டு சூடம் ஏற்றி அம்மனை வழிபாடு செய்த பின்னர் புறப்பட்டு செல்வார்கள்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவில் சமயபுரம் திருக்கோவிலுக்கு சொந்தமான நுழைவு வாயிலில் நெல் ஏற்றிமண்ணச்சநல்லூர் சென்ற கனரக லாரி மோதியது . இதில் நுழைவு வாயில் இடதுபுறம் தூணில் விரிசல் ஏற்பட்டு எந்த நேரத்தில் வேண்டுமானாலும் விழும் அபாயத்தில் உள்ளது .