ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த குளம் கண்டுபிடிப்பு…

0 266
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் முசிறி அருகே நாகையாநல்லூர் என்ற ஊரில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வெட்டப்பட்ட பழமையான குளமும் அந்த குளக்கரையில் கிபி பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த வணிக குழு கல்வெட்டும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

தொல்லியல் துறையின் முன்னாள் உதவி இயக்குனர் முசிறி அருகே உள்ள ஆமூர் நாக.கணேசன் இக்குளத்தினையும் கல்வெட்டினையும் கண்டுபிடித்துள்ளார். தற்போது இந்து சமய அறநிலையத்துறையில் திருச்சி மண்டல தொல்லியல் ஆலோசகராக பணிபுரியும் நாக. கணேசன் நாகையாநல்லூரில் உள்ள நாராயண பெருமாள் திருக்கோயிலை ஆய்வு செய்தபோது இப்பழமையான குளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

200 செமீஉயரமும் 80 சென்டிமீட்டர் அகலமும் கொண்ட ஒழுங்கற்ற பலகைகளின் ஒரு பக்கத்தின் மேற்பகுதியில் ஏழு வரிகளில் கிபி பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த எழுத்தமைதியில் தமிழ் கல்வெட்டு பொறிப்புகள் காணப்படுகிறது. ஸ்வஸ்திஸ்ரீ கொற்றவன் கொ முன்னூற்றவர்களும்
………. மக்கள்ளாரும் ஐம்…………. செய்வித்தக்குளம் என்று பொறிக்கப்பட்டுள்ளது.கல்வெட்டில் பல எழுத்துக்கள் பொறிந்து காணப்படுகிறது.

அந்த கல்வெட்டின் கீழே குதிரை, அங்குசம், வால், ஈட்டி, வில், அம்பு, சங்கு, விளக்கு, சுருள், கத்தி அரிவாள் போன்ற படைகலன்கள் புடைப்பு சிற்பங்களாக பொறிக்கப்பட்டுள்ளன.

கிமு 3ம் நூற்றாண்டில் இருந்து கங்கை முதல் ராமேஸ்வரம் வரை தட்சிணபதம் என்ற வணிக பெருவழி பயன்பாட்டில் இருந்துள்ளது. அப்பெருவழி தமிழ்நாட்டில் கொல்லிமலை, நாகைநல்லூர், கரூர், வெள்ளியணை, வேடசந்தூர், மதுரை, வழியாக ராமேஸ்வரத்தில் உள்ள அரியாங்குண்டு துறைமுகப்பட்டினம் வரை சென்றுள்ளது. இந்த வணிக பெருவழியில் ஐநூற்றுவர், அய்யபொழில் ஐநூற்றுவர், வளஞ்சியர் ஐநூறுற்றுவர், முந்நூற்றுவர் போன்ற வணிக குழுக்கள் வணிகம் மேற்கொண்டனர். அந்த வணிக குழுக்களில் முந்நூற்றுவர் வணிக குழு நாகைநல்லூரில் தங்கி வணிகம் மேற்கொண்ட பொழுது மக்களோடு இணைந்து இக்குளத்தை வெட்டி கொடுத்ததாக கல்வெட்டு குறிப்பிடுகிறது.

மழைக்காலங்களில் வெள்ள பெருக்காக ஓடிவரும் மழை நீரை ஆங்காங்கே குளங்களை வெட்டி தேக்கி வைத்து வேளாண்மைக்கும் குடிநீர் தேவைக்கும் மக்கள் பயன்படுத்தினர். கொல்லிமலையில் இருந்து ஓடிவரும் மழை நீர் தூசூர் ஏரியை நிரப்பி அதிகப்படியான தண்ணீர் அதன் போக்கில் ஓடி வந்து தலைமலை பற்றி சேர்வைக்காரன் பற்றி ஏரிகளை நிரப்பி இறுதியில் நாகைநல்லூர் குளத்தை நிரப்பியுள்ளது. அதையும் மீறி வரும் வெள்ள நீர் நத்தம் வழியாக காவிரி ஆற்றில் கலந்துள்ளது. குளங்களையும் தண்ணீர் வரும் வழியையும் மக்களே வெட்டி ஆண்டுதோறும் பராமரித்து வந்துள்ளனர். நாகைநல்லூர் குளத்தை கிபி 10 நூற்றாண்டில் அவ்வூர் மக்களோடு அவ் ஊரில் வணிகம் செய்த முந்நூற்றுவர் வணிகக் குழுவும் இணைந்து வெட்டி கொடுத்துள்ளதை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது,என்று தொல்லியல் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் நாக. கணேசன் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.