பழைய பிளாஸ்டிக் குடோனில் திடீர் தீ விபத்து
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கரியமாணிக்கம் பிரிவு சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் குடோனில் திடீர் தீ விபத்து. 10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம். இரண்டு மணி நேரத்துக்கு மேலாக தீயணைக்க போராடும் தீயணைப்பு வீரர்கள்.
மண்ணச்சநல்லூர் அருகே அய்யம்பாளையம் கீழுரைச் சேர்ந்தவர் நந்தகுமார். அதே பகுதி வசவாண்டி கொட்டம் பகுதியைச் சேர்ந்தவர் தனபால். இவர்கள் இருவரும் பங்குதாரர்களாக சமயபுரம் அருகே கரியமாணிக்கம் பிரிவு சாலையில் ஸ்ரீ வேலவன் பிளாஸ்டிக் என்ற பெயரில் பிளாஸ்டிக் குடோன் வைத்துள்ளனர். இங்கு பழைய பிளாஸ்டிக் பொருட்களை வாங்கி அதை மறுசுழற்சி செய்து பவுடர் ஆக்கி பேக்கிங் செய்து பிளாஸ்டிக் பொருள்கள் தயாரிக்கும் கம்பெனிக்கு அனுப்பி வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு 7 மணிக்கு மேல் பிளாஸ்டிக் குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்த சமயபுரம், ஸ்ரீரங்கம் மற்றும் திருச்சி தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை சார்பில் மாவட்ட உதவி அலுவலர் லியோ ஜோசப் ஆரோக்கியராஜ் தலைமையில் வீரர்கள் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தீயை அணைக்க போராடி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த சமயபுரம் போலீசார் தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் தீ விபத்து குறித்து ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இந்த தீ விபத்தால் பிளாஸ்டிக் பொருட்கள் இயந்திரங்கள் என சுமார் 10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானது. தீ விபத்து ஏற்பட்டவுடன் அக்கம் பக்கம் குடியிருந்த பொதுமக்கள் அப்பகுதியில் குவிந்தனர். இந்த தீ விபத்து இயந்திரம் மற்றும் மின்சார ஒயர்கள் இல்லாத பகுதியில் ஏற்பட்டதால் மர்ம நபர்கள் யாராவது தீ வைத்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. தீவிர விசாரணைக்கு பிறகு தீ விபத்து எப்படி நடந்தது என தெரிய வரும் என போலீசாரும் தீயணைப்புத் துறையினரும் தெரிவித்தனர்.