பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு அலை வீசிக்கொண்டிருக்கிறது : அமைச்சர் பேச்சு
திருச்சி, மே 31 திருச்சி மாவட்டம், மணப்பாறை ஒன்றிய திமுகவின் சார்பில் 2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கான ஆயத்த செயல்வீரர்கள் கூட்டம் புத்தாநத்தம் தனியார் திருமண மகாலில் ஒன்றியச் செயலாளர் ராமசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது. இக் கூட்டத்தில் மணப்பாறை ஒன்றியத்தில் மட்டும் புதிதாக திமுகவில் இணைந்த 4500 புதிய உறுப்பினர்களின் படிவங்கங்களை தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனை பெற்றுக் கொண்டு அமைச்சர் பேசுகையில்,
மணப்பாறை சட்டமன்றத் தொகுதியில் 50 ஆயிரம் பால் உற்பத்தியாளர்கள் இருப்பதாகவும் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளீர்கள் இது கண்டிப்பாக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். நீங்கள் மனதில் வைத்துக்கொண்டிருக்கின்ற இதை செய்தால் நல்லா இருக்கும் என்று நினைக்கக் கூடிய கோரிக்கைகளையும் திமுக அரசு படிப்படியாக நிறைவேற்றும். இதுவே எங்களது தலையாய கடமையாக இருக்கும். சாலை, தெருவிளக்கு, குடிநீர் பிரச்சினையாக இருந்தாலும், படித்துவிட்டு பிள்ளைகள் வேலையில்லாமல் இருக்கிறதே அதற்கு ஒரு வேலைவாய்ப்பு கொடுக்கக்கூடாதா என்ற ஏக்கமாக இருந்தாலும் சரி அதை எல்லாம் இந்த அரசு நிவர்த்தி செய்யும். அதனால தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு பயணம் செய்து புதிய முதலீடுகளை கொண்டு வரும் நிலையில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற எண்ணத்தில் இன்றைக்கு அந்தபணியையும் மேற்கொண்டு ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கின்றார். திமுக இயக்கம் கிளைக் கழக செயலாளர்களை நம்பித்தான் உள்ளது. தமிழ்நாட்டு முதலமைச்சர் யாரை கை காட்டுகிறாரோ அவர்தான் இந்த இந்திய திருநாட்டின் வழிநடத்தக் கூடிய பிரதமராக வரவேண்டும் எனும்போது நமது உழைப்பே அதற்கு செலுத்த தயாராக இருக்க வேண்டும். அவர் யாரை நாடாளுமன்ற வேட்பாளராக கை காட்டினாலும் நிற்பது நமது முத்தமிழ் அறிஞர் கலைஞர், நமது முதலமைச்சர் என்ற வகையில் பணியாற்ற வேண்டும். நாடாளுமன்றத் தேர்தல் என்று வரும்போது நாம் ஒன்றை மனதில் கொள்ள வேண்டும். இன்றைக்கு மோடியின் எதிர்ப்பு அலை வீசிக்கொண்டிருக்கின்றது அதே வேளையில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவருக்கு அதிகமாக ஆதரவுகளை பேசிக் கொண்டிருக்கின்றது இந்த இரண்டு அலையின் மூலமாக 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிக சதவீத வாக்குகளை பெற வேண்டும். என அமைச்சர் பேசினார்.இக்கூட்டத்தில் திண்டுக்கல் மாவட்டக் கழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான் ஐ.பி.செந்தில்குமார், சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் மாவட்ட கழக நிர்வாகிகள் பன்னப்பட்டி கோவிந்தராஜ், சபியுல்லா, கவிஞர் சல்மா, மணப்பாறை ஒன்றிய குழு தலைவர் அமிர்தவள்ளி, மருங்காபுரி ஒன்றிய செயலாளர்செல்வராஜ் மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள் மாவட்டக் கழக நிர்வாகிகள் ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.