அரசு பேருந்தில் கைவிடப்பட்ட ஆண் சிசு மீட்பு
திருச்சி, பிப்.3 புதுக்கோட்டையில் இருந்து திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு அரசு பேருந்து ஒன்று வந்தது. அதில் இருந்த அனைத்து பயணிகளும் இறங்கி சென்றுவிட்டனர். ஓட்டுநர், நடத்துநர் ஆகியோரும் சாப்பிட சென்று விட்டனர். பின்னர் அவர்கள் மீண்டும் பேருந்தை இயக்க அதில் ஏறினர். அப்போது பேருந்தின் கடைசி இருக்கையில் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டது. உடனே ஓட்டுநரும், நடத்துநகம் அங்கு சென்று பார்த்தனர். அப்போது பிறந்து 10 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று பயணிகள் அமரும் இருக்கையில் கிடந்தது. குழந்தையின் அருகில் பாலுடன் கூடிய பால் பாட்டில், உடைகள் ஆகியவையும் இருந்தன.
இதையடுத்து ஓட்டுநர், நடத்துநனர் ஆகியோர் இதுபற்றி புறக்காவல் நிலைய காவல்துறையில் தெரிவித்து அவர்களிடம் குழந்தையை ஒப்படைத்தனர். மேலும் அவர்கள், குழந்தை பசியில் அழுததால் பாட்டிலில் இருந்த பாலை குழந்தைக்கு கொடுத்தனர். பின்னர் இதுகுறித்து சைல்டு லைன் அமைப்பினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு வந்த சைல்டு லைன் திட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன், ஆலோசகர் பிரியா ஆகியோர் குழந்தையை மீட்டு குழந்தைகள் நலக்குழு ஆணையின்படி திருச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஒப்படைத்தனர். அங்கு சிசு வார்டில் இன்குபேட்டரில் வைத்து குழந்தை பாதுகாக்கப்படுகிறது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கண்டோன்மெண்ட் காவல்துறையினர் அந்த பச்சிளம் குழந்தையை விட்டுச்சென்ற தாய் யார்? எதற்காக விட்டுச்சென்றார்? என்று கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.